Tazhal Media – தழல் மீடியா

/ Nov 15, 2026
Latest News
tms

14 நாட்கள் பிரசாரம் செய்தும் வெற்றியை எட்ட முடியவில்லை! தோல்வியை ஒப்புக்கொண்ட அட்லி

மலாக்கா, நவம்பர் 14 – மலாக்கா மாநிலத் தேர்தலில் புக்கிட் காத்தில் சட்டமன்றத் தொகுதியைத் தக்கவைக்க முடியாமல் தோல்வியடைந்ததை, பக்காத்தான் ஹராப்பான் மலாக்கா தலைவர் அட்லி சஹாரி ஒப்புக்கொண்டுள்ளார்.பாரிசான் நேஷனல் (BN) மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் (PN) இடையிலான அரசியல் ஒத்துழைப்பு காரணமாக, தேர்தல் பிரசாரத்தின் தொடக்கத்திலிருந்தே தாம் பின்னடைவைச் சந்தித்ததை உணர்ந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.

தொடக்கக் கணிப்பின்படி, இரு கூட்டணிகளின் ஒத்துழைப்பால் சுமார் 5,000 முதல் 6,000 வாக்குகள் வரை தாம் பின்தங்கியிருந்ததாக அட்லி கூறினார்.“ஆரம்பத்திலிருந்தே நான் மிகவும் பின்தங்கியிருப்பதை அறிந்திருந்தேன். 14 நாட்கள் பிரசாரத்தின் மூலம் அந்த இடைவெளியைக் குறைக்க முயன்றேன். ஆனால், என்னால் அதை எட்ட முடியவில்லை,” என்று அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அதிகாரப்பூர்வமற்ற தேர்தல் முடிவுகளின்படி, பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் முஹம்மது ரிட்ஸுவான் முஹம்மது ஷரீப் 14,851 வாக்குகளைப் பெற்று முன்னிலை வகித்தார். அட்லி 8,382 வாக்குகளை மட்டுமே பெற்றார்.இதன் மூலம் 6,469 வாக்குகள் பெரும்பான்மையில் ரிட்ஸுவான் முன்னிலை பெற்றுள்ளார். மற்றொரு வேட்பாளரான பார்ட்டி பெர்சாமா மலேசியாவைச் சேர்ந்த டாக்டர் அலிசா சே அம்ரான் 1,070 வாக்குகளையும், சுயேச்சை வேட்பாளர் அபு பக்கர் சபுடின் 127 வாக்குகளையும் பெற்றனர்.

இதற்கிடையில், புக்கிட் காத்தில் மக்களுக்குச் சேவையாற்றிய முன்னாள் மக்கள் பிரதிநிதி என்ற முறையில், வாக்காளர்களின் தீர்ப்பை மதிப்பதாக அட்லி தெரிவித்தார்.ஜனநாயக முறையில் மக்கள் வழங்கிய முடிவை ஏற்றுக்கொள்வதே அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.இருப்பினும், இந்த முடிவுகள் தேர்தல் ஆணையத்தின் (SPR) அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலுக்கு உட்பட்டவை என ஆஸ்ட்ரோ அவானி தெரிவித்துள்ளது.

Scroll to Top