
கோலாலம்பூர், நவம்பர் 14 – மலேசியா ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான இணையவழி சைபர் தாக்குதல் முயற்சிகளை எதிர்கொண்டு வருவதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். இதனை எதிர்கொள்ள நாட்டின் இணையப் பாதுகாப்புத் திறனை மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.கோலாலம்பூரில் உள்ள 515 ஆவது அஸ்கார் வத்தானியா முகாமில் நடைபெற்ற தேசிய சேவைப் பயிற்சித் திட்டத்தின் (PLKN 3.0) இளம் வீரர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
தற்போதைய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் பாரம்பரிய ராணுவத் தாக்குதல்களுடன் மட்டும் நின்றுவிடவில்லை என்றும், இணையத் தாக்குதல்கள், கணினி அமைப்புகளுக்குள் ஊடுருவுதல் மற்றும் பயங்கரவாதக் குழுக்களின் நடவடிக்கைகள் ஆகியவையும் நாட்டின் பாதுகாப்புக்கு முக்கிய சவால்களாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். இதனை முன்னிட்டு, மலேசிய ஆயுதப்படையின் (ATM) இணையப் பாதுகாப்புப் பிரிவை வலுப்படுத்துவது குறித்து கடந்த வாரம் ராணுவ உயர்மட்டத் தலைமையுடன் ஆலோசனை நடத்தியதாகவும் அன்வார் குறிப்பிட்டார்.
அமெரிக்கா போன்ற தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடுகளில்கூட தொலைத்தொடர்பு அமைப்புகளில் ஏற்பட்ட பாதிப்புகளால் விமான நிலையச் செயல்பாடுகள் முடங்கிய சம்பவத்தை அவர் உதாரணமாகச் சுட்டிக்காட்டினார். இதுபோன்ற அச்சுறுத்தல்களை எந்த நாடும் அலட்சியப்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.மேலும், நாட்டின் பாதுகாப்புத் திட்டங்கள் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றப்பட வேண்டும் என்றும், ட்ரோன் பயன்பாடு மற்றும் இணையப் பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்துவதுடன் பாரம்பரிய ராணுவப் பாதுகாப்பையும் புறக்கணிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.
இதற்காக பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடு வரலாற்றிலேயே உயர்ந்த நிலைக்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், பழைய கப்பல்கள், விமானங்கள் மற்றும் கவச வாகனங்களை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.பாதுகாப்புத் துறை கொள்முதல்களில் கடந்த காலங்களில் ஏற்பட்ட தரகர்கள் மற்றும் அதிகப்படியான கமிஷன் பிரச்சினைகள் மீண்டும் நிகழாமல் இருப்பதையும் அரசாங்கம் உறுதிப்படுத்தும் என அவர் கூறினார்.



