Tazhal Media – தழல் மீடியா

/ Nov 15, 2026
Latest News
tms

தமிழ்ப்பள்ளிகள், ஆலயங்கள், இந்திய வணிகர்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அரசு உறுதி – பிரதமர் அன்வார்

கோலாலம்பூர், நவம்பர் 14 – மலேசிய இந்திய சமூகத்தினர் எதிர்கொள்ளும் கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக நலன் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்தும் எனப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார்.குறிப்பாக, தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாடு, தமிழ் மொழியின் வளர்ச்சி மற்றும் நகர்ப்புறங்கள், தோட்டப்புறங்களில் வாழும் குறைந்த வருமானம் கொண்ட இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இன்று கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் நடைபெற்ற தேசிய அளவிலான தீபாவளிக் கொண்டாட்டத்தில் உரையாற்றிய பிரதமர், இந்திய சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இன்னும் மேம்படுத்த வேண்டிய பல அம்சங்கள் இருப்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.இந்து ஆலயங்கள் தொடர்பான பிரச்சினைகள், இந்திய வணிகர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், நகர்ப்புறங்கள் மற்றும் தோட்டப்புறங்களில் வறுமையில் வாழும் இந்தியக் குடும்பங்களின் நிலை ஆகியவற்றுக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மக்களின் இனத்தை அடிப்படையாகக் கொள்ளாமல், அவர்களின் உண்மையான தேவைகளைக் கருத்தில் கொண்டே நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பது மடானி அரசாங்கத்தின் அணுகுமுறை என அன்வார் விளக்கினார்.இதன் அடிப்படையில், ரஹ்மா ரொக்க உதவி (STR), அடிப்படை ரஹ்மா உதவி (SARA) உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகவும், அடுத்த ஜனவரி மாதம் அனைத்து வகைப் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களுக்கு தலா 200 ரிங்கிட் உதவி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இன, மத, மொழி மற்றும் கலாசார வேறுபாடுகளைக் கடந்து மக்கள் ஒருவரையொருவர் மதித்து, ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.நாட்டின் நல்லிணக்கத்தையும் வளர்ச்சியையும் பாதுகாக்க பரஸ்பர மரியாதையும் மனிதநேயமும் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

Scroll to Top