Tazhal Media – தழல் மீடியா

/ Nov 15, 2026
Latest News
tms

இனப் பிரச்சினையை முன்வைத்து ஊழலை மறைக்க வேண்டாம்! – பிரதமர் அன்வார்

இனத்தின் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரம் குறித்து பேசுவதைப் பயன்படுத்தி, ஊழல் மற்றும் மோசடி விவகாரங்களிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் சில அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இன நலனுக்காகப் போராடுவதாகக் கூறிக்கொள்ளும் சில தலைவர்கள், உண்மையில் தங்களது சொந்தச் செல்வத்தையும் குடும்பத்தின் பொருளாதார நலன்களையும் பெருக்கிக்கொள்வதில் கவனம் செலுத்துவதாக அவர் குற்றஞ்சாட்டினார். இன்று கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் நடைபெற்ற தேசிய அளவிலான தீபாவளிக் கொண்டாட்டத்தில் உரையாற்றிய அன்வார், சில தரப்பினர் இன விவகாரங்களைத் தொடர்ந்து எழுப்புவதன் மூலம் ஊழல் மற்றும் மோசடி குறித்த கேள்விகளை மறைக்க முயற்சிப்பதாகக் கூறினார்.

இனத்தின் எதிர்காலம் மற்றும் உரிமைகள் குறித்து மேடைகளில் உரக்கப் பேசும் சில தலைவர்கள், நாட்டின் செல்வந்தர்களில் ஒருசிலராக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.இன உணர்வுகளைத் தூண்டுவது உண்மையான சமூக நலனுக்கான போராட்டமல்ல; மாறாக, தனிப்பட்ட மற்றும் குடும்ப நலன்களைப் பாதுகாக்கும் முயற்சியாக அமைந்துவிடக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதேவேளையில், மலாய் மொழியின் தேசிய மொழி அந்தஸ்து, இஸ்லாத்தின் கூட்டரசு மத அந்தஸ்து மற்றும் மலாய்க்காரர்களின் உரிமைகள் ஆகியவை கேள்விக்குட்படுத்தப்படக் கூடாது எனக் குறிப்பிட்ட அவர், அனைத்து இன மக்களினதும் உரிமைகள், நீதி மற்றும் நல்வாழ்வைப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் பொறுப்பு என்றார்.இன, மத வேறுபாடுகளைக் கடந்து மனிதநேயம், பரஸ்பர மரியாதை மற்றும் ஒற்றுமையைப் பாதுகாப்பதன் மூலமே மலேசியா தொடர்ந்து முன்னேற முடியும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

Scroll to Top