
கோலாலம்பூர், நவம்பர் 13 – செபாக் தக்ரா விளையாட்டின் எதிர்கால வளர்ச்சியிலும், அதன் சர்வதேச நிர்வாக முடிவுகளிலும் மலேசியாவின் பங்களிப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமானால், ஆசிய மற்றும் சர்வதேச நிர்வாக அமைப்புகளில் நாட்டின் பிரதிநிதித்துவம் அவசியம் என மலேசிய செபாக் தக்ரா சம்மேளனத் தலைவர் டத்தோ மொஹமட் சுமாலி ரெடுவான் தெரிவித்துள்ளார்.
ஆசிய செபாக் தக்ரா சம்மேளனமான ASTAF மற்றும் சர்வதேச செபாக் தக்ரா சம்மேளனமான ISTAF ஆகிய அமைப்புகளில் மலேசியா இடம்பெறுவது, விளையாட்டின் தொழில்நுட்ப விதிமுறைகள், போட்டி ஏற்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பான முடிவுகளில் நாட்டின் கருத்துகளை முன்வைக்க உதவும் என்றார்.
வெளியில் இருந்து கருத்துகளைத் தெரிவிப்பதைக் காட்டிலும், முடிவுகளை எடுக்கும் நிர்வாக அமைப்புகளுக்குள் இருந்து செயல்படுவதன் மூலமே ஆக்கபூர்வமான மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கடந்த நவம்பர் 9ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் போட்டியின்றி ASTAF துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுமாலி, புதிய தலைமைத்துவத்தின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக செபாக் தக்ராவை ஒலிம்பிக் போட்டியில் இடம்பெறச் செய்வதற்கான முயற்சிகள் இருக்கும் எனக் குறிப்பிட்டார்.
இதற்காக சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC), ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் (OCA) மற்றும் ISTAF ஆகிய அமைப்புகளுடன் மூலோபாய ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில், ISTAF அமைப்பின் அடுத்த தேர்தலில் தலைவர், துணைத் தலைவர் அல்லது உதவித் தலைவர் ஆகிய பதவிகளில் எதற்குப் போட்டியிடுவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என சுமாலி தெரிவித்தார். இதற்கான வேட்புமனுத் தாக்கல் நவம்பர் 21ஆம் தேதி நிறைவடைகிறது.
மலேசிய செபாக் தக்ரா சம்மேளனத்துடன் ஆலோசித்த பின்னர், தனது தற்போதைய பொறுப்புகள் மற்றும் நேர ஒதுக்கீட்டைக் கருத்தில் கொண்டு இறுதி முடிவெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
ASTAF மாநாடு மற்றும் ISTAF காங்கிரஸ் டிசம்பர் 9ஆம் தேதி பாங்காக்கில் நடைபெறவுள்ளன.



