
காடெக், நவம்பர் 13 – மலாக்கா மாநிலத் தேர்தலில் காடெக் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மஇகா வேட்பாளருக்கு பெரிக்கத்தான் நேஷனல் (பிஎன்) தலைவர்கள் வெளிப்படையான ஆதரவை வழங்கியுள்ளதாக மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்துள்ளார்.
காடெக்கில் நடைபெற்ற ‘செராமா முஃபாகாட்’ எனும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பாரிசான் நேஷனல் மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து பங்கேற்றனர்.
இரு முக்கிய அரசியல் கூட்டணிகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பும், இணக்கமான அணுகுமுறையும் மலாக்கா மாநிலத் தேர்தலை எதிர்கொள்வதில் பொதுவான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாக சரவணன் குறிப்பிட்டார்.
குறிப்பாக, காடெக் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மஇகா வேட்பாளருக்கு பெரிக்கத்தான் நேஷனல் தலைமைத்துவம் வெளிப்படையாக ஆதரவு வழங்கியிருப்பதற்கு அவர் நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்.
இந்த அரசியல் ஒத்துழைப்பும் ஒற்றுமையும் தொடர்ந்து வலுப்பெற்று, மலாக்கா மக்களின் எதிர்கால நலனுக்குப் பங்களிக்க வேண்டும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
மலாக்கா மாநிலத் தேர்தலை முன்னிட்டு பிஎன் மற்றும் பிஎன் கூட்டணிகளுக்கு இடையிலான இந்த இணக்கமான அணுகுமுறை, காடெக் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தின் முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது.



