
கோத்தா திங்கி, நவம்பர் 14 – இணையவழி மோசடிகள் மற்றும் தனிநபர் தகவல் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்காமல் இருக்க பொதுமக்கள் தங்களது டிஜிட்டல் பாதுகாப்பு விழிப்புணர்வை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என பிரதமர் துறையின் (சட்டம் மற்றும் நிறுவனச் சீர்திருத்தம்) அமைச்சர் டத்தோஸ்ரீ அசலினா ஒத்மான் சைட் வலியுறுத்தியுள்ளார்.தொழில்நுட்ப வளர்ச்சியும் ஸ்மார்ட் சாதனங்களின் அதிகரித்த பயன்பாடும் காரணமாக, ஒருசில விநாடிகளிலேயே தனிநபர் தகவல்கள் திருடப்படுவதுடன், சட்டவிரோதமாகப் பணப் பரிமாற்றங்களும் நடைபெறக்கூடும் என அவர் எச்சரித்தார்.
தொழில்நுட்பம் அன்றாட வாழ்க்கையை எளிதாக்கியிருந்தாலும், இணையக் குற்றவாளிகளின் தந்திரமான செயல்பாடுகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள பயனர்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார்.கோத்தா திங்கி மாவட்டம், பண்டார் பெனாவாரில் உள்ள டேவான் கெஜோராவில் நடைபெற்ற பாதுகாப்பான இணையப் பயன்பாட்டுப் பிரசார சமூகக் கண்காட்சி நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
முன்பு குற்றவாளிகள் நேரடியாகச் செயல்பட்ட நிலையில், தற்போது ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தியே பொதுமக்களை ஏமாற்றும் சூழல் உருவாகியுள்ளதாக அசலினா குறிப்பிட்டார். வங்கிக் கணக்கு விவரங்கள், தனிப்பட்ட அடையாள எண்கள் (PIN) உள்ளிட்ட முக்கியத் தகவல்களை யாரிடமும் பகிரக்கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார்.
இதற்கிடையில், இணையப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் 2025ஆம் ஆண்டின் இணையப் பாதுகாப்புச் சட்டம் (ONSA) உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் மூலம் டிஜிட்டல் சேவை வழங்குநர்களின் பொறுப்புகளை அரசாங்கம் அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.இணைய நிதி மோசடிகள், பிறரின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தும் குற்றங்கள், இணையவழித் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல்கள் ஆகியவற்றைத் தடுப்பதற்காக குற்றவியல் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்திலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இதற்கிடையில், மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் (MCMC) ஜோகூர் மாநில இயக்குநர் சையத் ஈசா அல்சகோஃப் கூறுகையில், கடந்த செப்டம்பர் மாதம் வரை ஜோகூரின் 10 மாவட்டங்களில் 588 பாதுகாப்பான இணையப் பிரசார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, மொத்தம் 38,049 பேர் பங்கேற்றுள்ளதாகத் தெரிவித்தார்.2026ஆம் ஆண்டில் மாநிலம் முழுவதும் 10 சமூகக் கண்காட்சிகளை நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், கோத்தா திங்கி இந்த ஆண்டின் ஏழாவது நிகழ்ச்சி நடைபெறும் இடமாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.



