
கோலாலம்பூர், நவம்பர் 14 – ஏறக்குறைய 10 ஆண்டுகளாகப் புதிய வீடுகளுக்காகக் காத்திருந்த ஸ்ரீ பஹாங் குடியிருப்பாளர்களின் எதிர்பார்ப்பு தற்போது நிறைவேறும் நிலையை எட்டியுள்ளது. அவர்களில் 647 பேர் புதிய ரெசிடென்சி மாரூஃப் (Residensi Maarof) குடியிருப்பில் வீடுகளைப் பெறுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கையில் பங்கேற்றுள்ளனர்.
மொத்தம் 716 குடியிருப்பாளர்களில் 647 பேர் இன்று நடைபெற்ற வீடுகளுக்கான குலுக்கல் மற்றும் அலகுகள் ஒதுக்கீட்டு நடைமுறைக்குப் பதிவு செய்துள்ளனர்.கோலாலம்பூர் மாநகர மன்றத்தின் (DBKL) பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினரும் தொடர்புத்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபாட்சில் கலந்துகொண்டார்.
இந்த நடவடிக்கை, நீண்டகாலமாக மறுமேம்பாட்டுத் திட்டத்திற்காகக் காத்திருக்கும் குடியிருப்பாளர்கள் புதிய வீடுகளுக்குக் குடிபெயர்வதற்கான முக்கிய முன்னேற்றமாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.மறுமேம்பாட்டுச் செயல்முறை முழுவதும் குடியிருப்பாளர்கள் வெளிப்படுத்திய பொறுமைக்கும் ஒத்துழைப்புக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
மேலும், குடியிருப்பாளர்களின் நலன்களும் உரிமைகளும் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய, DBKL மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் தொடர்ந்து இணைந்து செயல்படுவேன் என்றும் ஃபஹ்மி உறுதியளித்தார்.இதற்கிடையில், ரெசிடென்சி மாரூஃப் குடியிருப்புத் திட்டத்தைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விரைவில் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.



