Tazhal Media – தழல் மீடியா

/ Nov 15, 2026
Latest News
tms

8 மணி நேர வெளியே செல்ல அனுமதி: மருத்துவமனை உட்பட நான்கு இடங்களுக்குச் செல்லும் நஜிப்!

கோலாலம்பூர், நவம்பர் 14 – வீட்டுக் காவலில் இருக்கும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கிற்கு, எட்டு மணி நேரம் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த அனுமதியின் கீழ் மருத்துவமனைக்குச் செல்வது உட்பட நான்கு நடவடிக்கைகளில் அவர் ஈடுபடவுள்ளதாக ஃப்ரீ மலேசியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

வீட்டுக் காவல் நிபந்தனைகளின்படி, நஜிப் தாம் வசிக்கும் ஜாலான் லங்காக் டூத்தா இல்லத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்கூட்டியே எழுத்துப்பூர்வ அனுமதி பெற வேண்டும். குறிப்பிட்ட காரணங்களுக்காக மட்டுமே இந்த அனுமதி வழங்கப்படும்.மருத்துவமனைக்குச் செல்வது, மத வழிபாட்டில் கலந்துகொள்வது உள்ளிட்ட அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகள் சிறைத்துறை அதிகாரிகளின் கண்காணிப்பில் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்கிடையில், நவம்பர் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொழுகைக்காக நஜிப் காஜாங் சிறைச்சாலைக்குச் சென்றதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. காலை சுமார் 10.30 மணியளவில் சிறைச்சாலை மற்றும் காவல்துறை வாகனங்களின் பாதுகாப்புடன் அவர் தனது இல்லத்திலிருந்து புறப்பட்டார்.வீட்டுக் காவல் காலத்தில் நஜிப்பின் நடமாட்டம், பார்வையாளர்கள் சந்திப்பு, தொலைத்தொடர்பு சாதனங்களின் பயன்பாடு உள்ளிட்டவை கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுள்ளன.

விதிமுறைகளை மீறினால் வீட்டுக் காவல் அனுமதி ரத்து செய்யப்பட்டு மீண்டும் சிறைக்கு அனுப்பப்படலாம் என உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் ஏற்கெனவே எச்சரித்துள்ளார்.நஜிப், எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் வழக்கில் எஞ்சிய தண்டனையை 2028 ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை வீட்டுக் காவலில் அனுபவித்து வருகிறார்.

Scroll to Top