Tazhal Media – தழல் மீடியா

/ Nov 18, 2026
Latest News
tms

2029ஆம் ஆண்டு ஆசியான் தலைமைப் பொறுப்பு திமோர் லெஸ்டேவுக்கு!

மணிலா, நவம்பர் 16 – தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியானின் (ASEAN) 2029ஆம் ஆண்டுக்கான தலைமைப் பொறுப்பை திமோர் லெஸ்டே ஏற்கவுள்ளது. அதேவேளையில், துருக்கியை ஆசியானின் புதிய பேச்சுவார்த்தைப் பங்காளியாக ஏற்றுக்கொள்ளும் மலேசியாவின் முன்மொழிவுக்கும் உறுப்பு நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன. 49ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் எடுக்கப்பட்ட இந்த முடிவுகள், பிராந்திய ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான முக்கிய நகர்வுகளாக அமைந்துள்ளன.

மணிலாவில் நடைபெற்ற மாநாட்டுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், திமோர் லெஸ்டே ஆசியானில் இணைந்துள்ள புதிய உறுப்பினராக இருப்பதால், 2029ஆம் ஆண்டு தலைமைப் பொறுப்பை ஏற்கத் தேவையான நிர்வாகத் திறன்களையும் அனுபவத்தையும் மேம்படுத்த மற்ற உறுப்பு நாடுகள் உதவ வேண்டும் என்றார். தற்போதைய சுழற்சி முறையின்படி, அடுத்த ஆண்டு சிங்கப்பூரும், 2028ஆம் ஆண்டு தாய்லாந்தும், 2029ஆம் ஆண்டு திமோர் லெஸ்டேவும் ஆசியான் தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ளன.

இதற்கான முடிவு உறுப்பு நாடுகளின் ஒப்புதலுடன் எடுக்கப்பட்டுள்ளதாக அன்வார் தெரிவித்தார்.திமோர் லெஸ்டேவின் ஆசியான் ஒருங்கிணைப்புப் பணிகளுக்கு இந்தோனேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் ஏற்கெனவே உதவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.இதற்கிடையில், துருக்கியை ஆசியானின் பேச்சுவார்த்தைப் பங்காளியாக ஏற்றுக்கொள்ளும் மலேசியாவின் முன்மொழிவுக்கும் மாநாட்டில் ஒப்புதல் கிடைத்துள்ளதாக அன்வார் தெரிவித்தார்.

மேலும், சைப்ரஸ், ஸ்லோவாக்கியா மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளின் ஆசியான் ஒத்துழைப்பு கட்டமைப்பில் பங்கேற்பது தொடர்பான விவகாரங்களும் மாநாட்டில் விவாதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.ஆசியான் அமைப்புடன் வெளிநாடுகளின் உறவுகளையும் ஒத்துழைப்பையும் விரிவுபடுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முடிவுகள் அமைந்துள்ளன.

Scroll to Top