Tazhal Media – தழல் மீடியா

/ Nov 18, 2026
Latest News
tms

யேமனுக்கு எதிரான போட்டி: உலகத் தரவரிசை அழுத்தமல்ல, வெற்றிக்கான ஊக்கம் – செங் ஹோ

குவாங்டாங், நவம்பர் 17 – ஃபிஃபா உலகக் கால்பந்து தரவரிசையில் யேமனைவிட மலேசியா முன்னிலையில் இருப்பது ஹரிமாவ் மலாயா அணிக்கு அழுத்தத்தை ஏற்படுத்தாது; மாறாக, சிறந்த முடிவைப் பெறுவதற்கான ஊக்கமாக அமையும் என இடைக்காலத் தலைமைப் பயிற்சியாளர் டான் செங் ஹோ தெரிவித்துள்ளார். சீனாவுக்கு எதிரான ஆட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்புவதற்கு யேமனுக்கு எதிரான போட்டி சிறந்த வாய்ப்பாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.

மலேசிய கால்பந்து சங்கம் (FAM) ஊடகங்களுடன் பகிர்ந்த காணொளியில் பேசிய செங் ஹோ, சீனாவிடம் ஏற்பட்ட தோல்விக்குப் பின்னர் வீரர்களின் மன உறுதி சற்றுக் குறைந்திருந்தாலும், மீட்புப் பயிற்சி மற்றும் தயாரிப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு தற்போது அவர்கள் மீண்டும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதாகக் கூறினார்.ஃபிஃபா உலகத் தரவரிசையில் மலேசியா 135ஆவது இடத்திலும், யேமன் 147ஆவது இடத்திலும் உள்ளன. இந்தத் தரவரிசை வீரர்களுக்கு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளிப்பதாக அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், சீனாவுக்கு எதிரான போட்டியின்போது தசை காயத்துக்கு உள்ளான தற்காப்பு ஆட்டக்காரர் டொமினிக் டானின் பங்கேற்பு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.சீனாவுக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு மஞ்சள் அட்டைகள் பெற்று வெளியேற்றப்பட்ட ஃபெர்கஸ் டியர்னிக்குப் பதிலாக ரோமெல் மொராலஸ், பாவ்லோ ஜோசுவே அல்லது முஹம்மது ஷஃபிக் அஹ்மத் ஆகிய மூவரில் ஒருவரைத் தேர்வு செய்வது குறித்து பயிற்சியாளர் பரிசீலித்து வருகிறார்.

சீனாவின் குவாங்டாங் மாநிலம், ஜாவோகிங் நகரில் உள்ள விளையாட்டரங்கில் மலேசியா – யேமன் அணிகள் இன்று சர்வதேச நட்பு ரீதியிலான டயர் 1 போட்டியில் மோதுகின்றன.2026ஆம் ஆண்டுக்கான சர்வதேசப் போட்டி அட்டவணையைச் சிறந்த முடிவுடன் நிறைவு செய்வதே அணியின் இலக்கு என செங் ஹோ தெரிவித்துள்ளார்.

Scroll to Top