
செப்பாங், நவம்பர் 17 – பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன், இரண்டு நாள் அதிகாரப்பூர்வப் பயணமாக நேற்று நள்ளிரவு மலேசியா வந்தடைந்தார். இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவை மேலும் வலுப்படுத்துவதுடன், அதனை மூலோபாயக் கூட்டாண்மை நிலைக்கு உயர்த்துவதற்கான முக்கிய நகர்வாக அமைந்துள்ளது.
மக்ரோன் தனது மனைவி பிரிஜிட் மக்ரோன் மற்றும் அமைச்சர்கள், மூத்த அரசாங்க அதிகாரிகள் அடங்கிய குழுவுடன் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் பூங்கா ராயா வளாகத்தை இரவு 11.10 மணியளவில் வந்தடைந்தார்.அவரை மலேசிய டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் தியோ வரவேற்றார். தொடர்ந்து, ராயல் ரேஞ்சர் படைப்பிரிவின் முதல் பட்டாலியனைச் சேர்ந்த 28 அதிகாரிகள் மற்றும் வீரர்கள் அடங்கிய மரியாதை அணிவகுப்பை மக்ரோன் பார்வையிட்டார். மலேசியாவின் பன்முகக் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளும் வரவேற்பு நிகழ்வில் இடம்பெற்றன.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்படும் இந்தப் பயணம், 2017ஆம் ஆண்டு மே மாதம் பிரான்ஸ் அதிபராகப் பொறுப்பேற்ற பின்னர் மக்ரோன் மலேசியாவுக்கு மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வப் பயணமாகும்.
இன்று நவம்பர் 17ஆம் தேதி, கோலாலம்பூரில் உள்ள சுல்தான் அப்துல் சமாட் கட்டடத்தில் அவருக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தொடர்ந்து பிரதமர் அன்வாருடன் இருதரப்பு பேச்சுவார்த்தையும் இடம்பெறவுள்ளது. இந்தச் சந்திப்பில் பாதுகாப்பு, உயர்கல்வி, முக்கியக் கனிம வளங்கள், எரிசக்தி மாற்றம், வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும்.
இதனுடன் தொடர்புடைய பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இரு தலைவர்களின் முன்னிலையில் பரிமாறிக்கொள்ளப்படவுள்ளன. 2025ஆம் ஆண்டில் மலேசியா – பிரான்ஸ் இடையிலான மொத்த வர்த்தகம் 17.78 பில்லியன் ரிங்கிட்டை எட்டியிருந்தது. இந்தப் பயணத்தின் மூலம் இரு நாடுகளின் பொருளாதார மற்றும் தூதரக உறவுகள் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.



