Tazhal Media – தழல் மீடியா

/ Nov 18, 2026
Latest News
tms

அங்கோர் பகுதியில் 1,000 ஆண்டுகள் பழமையான இந்துக் கோயில் மீண்டும் திறப்பு! 14 ஆண்டுகால புனரமைப்புப் பணி நிறைவு

சியெம் ரீப், நவம்பர் 17:- கம்போடியாவின் புகழ்பெற்ற அங்கோர் தொல்லியல் பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள சுமார் 1,000 ஆண்டுகள் பழமையான வெஸ்ட் மெபோன் கோயில், 14 ஆண்டுகால புனரமைப்புப் பணிகளுக்குப் பின்னர் மீண்டும் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளது.

யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்தப் பகுதியில் அமைந்துள்ள கோயிலின் புனரமைப்புப் பணிகள், 12 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் மேற்கொள்ளப்பட்டன. கம்போடியாவின் APSARA தேசிய ஆணையமும் பிரான்ஸ் அரசாங்கமும் இணைந்து இப்பணிகளை முன்னெடுத்தன.கோயிலை மீண்டும் திறக்கும் நிகழ்வில் கம்போடிய மன்னர் நோரோடோம் சிஹாமோனியும், அந்நாட்டுக்கு வருகை தந்துள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோனும் கலந்துகொண்டு திறப்பு விழாவைச் சிறப்பித்தனர்.

வெஸ்ட் மெபோன் கோயில், 11ஆம் நூற்றாண்டின் மத்தியில் இந்து வழிபாட்டுத் தலமாகக் கட்டப்பட்டது. லேட்டரைட் கற்கள் மற்றும் மணற்கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இக்கோயில், அங்கோர் பகுதியின் மிகப்பெரிய நீர்த்தேக்கமான வெஸ்ட் பராய் நீர்த்தேக்கத்தின் மையப்பகுதியில் உள்ள தீவில் அமைந்துள்ளது.இந்தக் கோயில் அமைந்துள்ள இடத்தின் தனித்துவமான இயற்கைச் சூழலைக் குறிப்பிட்ட மன்னர் சிஹாமோனி, பரந்த நீர்ப்பரப்புக்கு மத்தியில் அமைந்துள்ள இக்கோயில் வரலாற்று மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் கொண்டது எனத் தெரிவித்தார்.

மேலும், கம்போடியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையிலான தொல்லியல் மற்றும் பாரம்பரியப் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு இது முக்கிய அடையாளமாக அமையும் என்றும் குறிப்பிட்டார்.புனரமைப்புப் பணிகள் மூலம் பழமையான கோயிலை மீண்டும் உயிர்ப்பிக்க உதவியதில் பிரான்ஸ் பெருமை கொள்வதாக அதிபர் மக்ரோன் தெரிவித்தார்.இதற்கிடையில், நீண்டகாலப் பாதுகாப்புப் பணிகளுக்குப் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ள வெஸ்ட் மெபோன் கோயில், கம்போடியாவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்குப் புதிய ஈர்ப்பிடமாக அமையும் என அந்நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹூட் ஹாக் தெரிவித்துள்ளார்.

கோயிலைப் பார்வையிட விரும்புவோர் படகு மூலம் அங்கு செல்லலாம். குறிப்பாக, சூரியன் மறையும் நேரத்தில் அந்த இடம் அமைதியான மற்றும் அழகிய சூழலை வழங்கும் என APSARA தேசிய ஆணையம் தெரிவித்துள்ளது.

Scroll to Top