
இஸ்லாமாபாத், நவம்பர் 17:உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் சமூகங்கள் எதிர்கொள்ளும் முக்கியமான சவால்களுக்குத் தீர்வு காண்பதில், 57 உறுப்பு நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பான OIC முக்கியப் பங்காற்றும் நிலையில் இருப்பதாக அதன் பொதுச்செயலாளர் இஸ்மாயில் ஓல்ட் ஷேக் அகமது தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை இஸ்லாமாபாத்தில் சந்தித்துப் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முஸ்லிம் உலகின் பிரதிநிதி அமைப்பாக விளங்கும் OIC, இஸ்லாமிய சமூகங்கள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினைகளை ஒன்றிணைந்து எதிர்கொள்வதற்கான தனித்துவமான வாய்ப்பையும் நிலையையும் கொண்டுள்ளதாக இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
இந்தச் சவால்களை எதிர்கொள்வதற்கான OIC-யின் முயற்சிகளுக்கு பாகிஸ்தான் முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உறுதியளித்துள்ளார்.
OIC பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக இஸ்லாமாபாத்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இஸ்மாயில், பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் (ECO) 30ஆவது அமைச்சர்கள் கூட்டத்தின் தொடக்க அமர்விலும் பங்கேற்றார். அந்தக் கூட்டத்திற்குப் பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் டார் தலைமை தாங்கினார்.அப்போது, மேற்கு ஆசியாவில் அமைதியை நிலைநாட்டவும் பதற்றங்களைக் குறைக்கவும் பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான ராஜதந்திர முயற்சிகளை அவர் பாராட்டினார்.
மேலும், OIC மற்றும் ECO அமைப்புகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தி, உறுப்பு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை அதிகரித்தல், பொருளாதாரத்தைப் பன்முகப்படுத்துதல், உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் அறிவுசார் பொருளாதாரத்தை நோக்கிய மாற்றத்தை விரைவுபடுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, இஸ்லாமாபாத்தில் உள்ள OIC அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான நிலைக்குழுவான COMSTECH தலைமையகத்திற்கும் அவர் விஜயம் செய்தார். அங்கு உறுப்பு நாடுகளின் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ஆதரவு நடவடிக்கைகள் குறித்து அவர் பார்வையிட்டார்.
முஸ்லிம் உலகின் பொதுவான பிரச்சினைகளை எதிர்கொள்வதில் உறுப்பு நாடுகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் அவசியம் என்பதை இந்தச் சந்திப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.



