Tazhal Media – தழல் மீடியா

/ Nov 18, 2026
Latest News
tms

அமைச்சரவையில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் தற்போது இல்லை – பிரதமர் அன்வார்

மணிலா, நவம்பர் 17 – மலேசிய அரசாங்கம் நிலையான நிலையில் செயல்பட்டு வருவதால், தற்போதைய சூழலில் அமைச்சரவையை மாற்றியமைக்க வேண்டிய அவசரத் தேவை எதுவும் இல்லை எனப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து அந்தோணி லோக் விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பாக எழுந்துள்ள ஊகங்களுக்குப் பதிலளித்த அவர், அரசாங்கம் தனது கொள்கைகளைச் செயல்படுத்துவதிலும் மக்களுக்கான பொறுப்புகளை நிறைவேற்றுவதிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகக் கூறினார்.

மணிலாவில் நடைபெற்ற 49ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டின் இடையே செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்களுடன் இணைந்து அரசாங்கம் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.அமைச்சரவைக் கூட்டங்களில் கொள்கைகள் விரிவாக விவாதிக்கப்படுவதுடன், இருதரப்பு உறவுகள், பலதரப்பு ஒத்துழைப்பு மற்றும் ஆசியான் தொடர்பான முக்கிய விவகாரங்களிலும் ஒருமித்த நிலைப்பாடு எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

அந்தோணி லோக்கின் ராஜினாமா முடிவைத் தாம் மதிப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர், அதனை ஏற்குமாறு அவர் வலியுறுத்தியிருந்தாலும், தாம் இதுவரை ராஜினாமாவை ஏற்கவில்லை என்றார். முன்னதாக, தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறும் லோக்கிடம் கேட்டுக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

கூட்டணி அரசாங்கங்களில் மத்திய மற்றும் மாநில அளவிலான அரசியல் நிலைப்பாடுகள் சில நேரங்களில் மாறுபடுவது இயல்பானது என்றும் அன்வார் விளக்கினார்.இதற்கிடையில், அரசாங்கம் நிலையற்ற நிலையில் இருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்த அவர், அவை அரசியல் பிரசார நோக்கத்துடன் மிகைப்படுத்தப்படுவதாகக் கூறினார்.தற்போதைக்கு அரசாங்கம் தனது பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து, நாட்டுக்கு சிறந்த சேவையை வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

Scroll to Top