Tazhal Media – தழல் மீடியா

/ Nov 23, 2026
Latest News
tms

ஈப்போவில் திடீர் வெள்ளப்பெருக்கு! அருவியில் அடித்துச் செல்லப்பட்ட 21 வயது பெண்ணைத் தேடும் பணிகள் தீவிரம்

ஈப்போ, நவம்பர் 21:பேராக் மாநிலம், ஈப்போவின் மேரு ராயா பகுதியில் அமைந்துள்ள புன்சாக் ஜெலபாங் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி, 21 வயதுடைய பெண் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக அஞ்சப்படுகிறது.

இன்று மாலை நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பாக மாலை 5.14 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பேராக் மாநில செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அகமது தெரிவித்தார்.தகவல் கிடைத்ததும் மேரு ராயா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஒன்பது வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்த இடத்தைச் சென்றடைய அவர்களுக்கு 18 நிமிடங்கள் ஆனதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் நான்கு பேர், அதாவது இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் சிக்கியிருந்தனர். அவர்களில் ஆற்றின் மறுகரையில் சிக்கியிருந்த எம். ஷமாலா (22) என்ற பெண்ணைத் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.மேலும், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஆர். மாதேஷ் (22) என்பவர் தாமாகவே நீந்தி கரை சேர்ந்தார். ஆற்றங்கரைக்கு அருகில் இருந்த வி. தசிவரன் (23) என்பவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

எனினும், பி. ஷேனா (21) என்ற பெண் மட்டும் இதுவரை காணாமல் போயுள்ளார். அவரைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.சம்பவ இடத்தில் நீரோட்டம் தொடர்ந்து வலுவாக இருப்பதால் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் சவால்கள் நிலவுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மாயமான பெண்ணைக் கண்டறியும் நோக்கில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Scroll to Top