Tazhal Media – தழல் மீடியா

/ Nov 23, 2026
Latest News
tms

இந்திய இளைஞர்கள் தொழில்முனைவோராக உருவாக RM50 மில்லியன் திட்டம்! – ரமணன் அறிவிப்பு

கோலாலம்பூர், நவம்பர் 22:மலேசிய இந்திய இளைஞர்கள் சொந்தமாகத் தொழில் தொடங்கி பொருளாதார ரீதியில் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கில், அரசாங்கம் பல்வேறு உதவித் திட்டங்களை முன்னெடுத்து வருவதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.குறிப்பாக, இந்திய சமூகத்தைச் சேர்ந்த புதிய தொழில்முனைவோருக்கு நிதி ஆதாரமும் தொடக்க மூலதனமும் கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில், மித்ரா (MITRA) வழியாக 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டில் ‘உயர்வு மடானி’ திட்டம் செயல்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.

கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக, தொழில்துறை சம்மேளனம் (KLSICCI) ஏற்பாடு செய்த தீபாவளி திறந்த இல்ல நிகழ்ச்சியில் உரையாற்றியபோது அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார். நவம்பர் 20ஆம் தேதி செந்தூலில் உள்ள HGH மாநாட்டு மையத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.குறைந்த மற்றும் நடுத்தர வருமானப் பிரிவுகளைச் சேர்ந்த இந்தியத் தொழில்முனைவோருக்கு மானியங்கள், ஆரம்பகட்ட முதலீட்டு உதவிகள் வழங்கப்படுவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.அரசாங்க அமைப்புகள், நிதி நிறுவனங்கள் மற்றும் வர்த்தகச் சங்கங்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால், புதிய தொழில்களைத் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு நிதி மற்றும் வழிகாட்டுதல் கிடைப்பதை எளிதாக்க முடியும் என்றும் ரமணன் சுட்டிக்காட்டினார்.

இதற்கு முன்னர், மித்ராவும் KLSICCI-யும் இணைந்து 2020 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் முன்னெடுத்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சித் திட்டங்களுக்காக நான்கு மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான நிதி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, 2022ஆம் ஆண்டு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 905 இந்தியத் தொழில்முனைவோருக்கு தலா 5,000 ரிங்கிட் வரையிலான வணிக உபகரண உதவிகள் வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.சில்லறை விற்பனை, உற்பத்தி, கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியத் தொழில்முனைவோர் ஆற்றி வரும் பங்களிப்பையும் அவர் பாராட்டினார்.

அனுபவம் வாய்ந்த தொழில்முனைவோரின் அறிவையும் வழிகாட்டுதலையும் இளம் தலைமுறையினர் பயன்படுத்திக்கொண்டு, எதிர்காலத்தில் வலுவான தொழில் நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Scroll to Top