
கோலாலம்பூர், நவம்பர் 21:பல்கலைக்கழகங்களில் கல்வித் திறனில் சிறந்து விளங்கும் பட்டதாரிகள், வாழ்க்கையில் ஒழுக்கம் மற்றும் நற்பண்புகளைப் பேணுவதிலும் அதே அளவு கவனம் செலுத்த வேண்டும் என்று பஹாங் சுல்தான் அல்-சுல்தான் அப்துல்லா ரியாயத்துதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா வலியுறுத்தியுள்ளார்.கல்வி மூலம் பெறப்படும் அறிவு நாட்டின் வளர்ச்சிக்கும், சமூக ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, மக்களிடையே பிளவுகளையும் பகைமையையும் உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்படக் கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற கோலாலம்பூர் பல்கலைக்கழகத்தின் (UniKL) 23ஆவது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றியபோதே சுல்தான் இவ்வாறு குறிப்பிட்டார். அந்நிகழ்வில் அவருக்கு கௌரவ முகாமைத்துவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.மேலும், இளைய தலைமுறையினரும் பொதுமக்களும் நாட்டின் அடிப்படை அரசியலமைப்பு மற்றும் தேசியக் கொள்கைகளை அலட்சியமாகக் கேள்விக்குள்ளாக்கும் அளவுக்கு ஆணவம் கொள்ளக் கூடாது என்றும் அவர் நினைவூட்டினார்.வாய்ப்புகளும் சுதந்திரமும் கிடைத்தவுடன் ஒருவர் தனது வேர்களையும் அடிப்படைப் பண்புகளையும் மறந்துவிடக் கூடாது எனக் குறிப்பிட்ட அவர், சுதந்திரம் என்பது விரும்பியபடி செயல்படுவதற்கான அனுமதியல்ல என்றும் தெரிவித்தார்.அதேபோல், துணிச்சல் என்ற பெயரில் மரியாதையற்ற முறையில் நடந்துகொள்வதையும், அறிவு என்ற பெயரில் ஆதாரமின்றி அனைத்தையும் கேள்விக்குள்ளாக்குவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.கருத்து வேறுபாடுகளையும் ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் தாம் ஒருபோதும் நிராகரிப்பதில்லை எனக் குறிப்பிட்ட சுல்தான், விமர்சனங்கள் உண்மைகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் அமைய வேண்டும்; அறிவுரைகள் மரியாதையுடன் தெரிவிக்கப்பட வேண்டும் என்றார்.மேலும், எதிர்த்துப் பேசுபவர்கள் அனைவரும் போராளிகள் அல்ல; உரத்த குரலில் பேசுபவர்கள் அனைவரும் சரியான கருத்தைக் கொண்டிருப்பவர்களும் அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.இந்த நிகழ்வில் தெங்கு அம்புவான் பஹாங் துங்கு அசிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா, தெங்கு மஹ்கோட்டா பஹாங் தெங்கு ஹசனல் இப்ராஹிம் ஆலம் ஷா உள்ளிட்ட அரச குடும்பத்தினர் கலந்து கொண்டனர். துணைப் பிரதமரும் UniKL இணை வேந்தருமான டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியும் நிகழ்வில் பங்கேற்றார்.UniKL-இன் முதல் வேந்தராக 21 ஆண்டுகள் ஆற்றிய தலைமைத்துவப் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் சுல்தானுக்கு இந்தக் கௌரவப் பட்டம் வழங்கப்பட்டது.



