
ஜகார்த்தா, நவம்பர் 21:இந்தோனேசியாவிலிருந்து மலேசியாவுக்குத் தங்கம் கடத்த மேற்கொள்ளப்பட்ட மூன்று தனித்தனி முயற்சிகளை அந்நாட்டு சுங்கத்துறை அதிகாரிகள் முறியடித்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 25.8 கிலோகிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், அதன் மதிப்பு சுமார் RM14.06 மில்லியன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தச் சம்பவங்களில் ஒன்றில், மலேசியாவைச் சேர்ந்த 34 வயது ஆடவர் ஒருவர் காலணிக்குள் தங்கக் கட்டிகளை மறைத்து விமானத்தில் கொண்டு செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டார்.
கடந்த நவம்பர் 12ஆம் தேதி, மேற்கு சுமத்ராவின் பாடாங் நகருக்கு அருகிலுள்ள மினாங்கபாவ் அனைத்துலக விமான நிலையத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. மலேசியாவுக்குச் செல்லும் விமானத்திற்காகக் காத்திருந்த பயணி ஒருவரின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுங்க அதிகாரிகள் அவரைக் கண்காணித்து சோதனையிட்டனர்.அப்போது, அவரது இரண்டு காலணிகளிலும் தலா இரண்டு தங்கக் கட்டிகள் என மொத்தம் நான்கு கிலோகிராம் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தத் தங்கத்தின் தூய்மை 99 விழுக்காட்டுக்கும் அதிகம் என ஆய்வகப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் RM2.25 மில்லியன் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.இதற்கிடையில், தெற்கு கலிமந்தானில் உள்ள பஞ்சர்மாசின் அருகேயுள்ள சியாம்சுதீன் நூர் அனைத்துலக விமான நிலையத்திலும் இரண்டு கடத்தல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.நவம்பர் 5ஆம் தேதி மலேசியாவின் கோலாலம்பூருக்குப் பயணிக்கத் தயாராக இருந்த நான்கு இந்தோனேசியப் பெண்களிடமிருந்து 4.2 கிலோகிராம் தங்கம் எனச் சந்தேகிக்கப்படும் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல், நவம்பர் 12ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட சோதனையில், மூன்று பயணிகளின் ஆடைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 17.6 கிலோகிராம் எடையுள்ள 17 தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டன.இந்த மூன்று சம்பவங்களிலும் தொடர்புடையவர்கள் மீது விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கடத்தல் முயற்சிகள் மூலம் செலுத்தப்படாமல் போன ஏற்றுமதி வரி மட்டும் சுமார் RM1.17 மில்லியன் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.மலேசியாவுக்குத் தங்கம் கடத்தும் முயற்சிகள் தொடர்பாக இந்தோனேசிய அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் தற்போது கவனம் பெற்றுள்ளன.



