
கோலாலம்பூர், 20 நவம்பர் : – தமிழ் இசை உலகில் தனித்துவமான ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட ஹிப் ஹாப் தமிழா குழு, தனது ‘மிருகம் மோட்’ உலக இசைப் பயணத்தின் தொடக்கமாக மலேசியாவில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளது.
இதன்படி, 2027ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி கோலாலம்பூரில் உள்ள மெர்டேக்கா விளையாட்டரங்கில் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த அறிவிப்பு மலேசிய இசை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
‘மிருகம் மோட்’ என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த இசைப் பயணம், வழக்கமான இசை நிகழ்ச்சியாக மட்டுமின்றி, ரசிகர்களுக்கு மறக்க முடியாத இசை அனுபவத்தை வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்நிகழ்ச்சியை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள சிறப்பு இசைக் காணொளியும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன் மூலம் இந்த இசைப் பயணத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
மலேசியாவில் முதலில் தொடங்கி, பின்னர் உலக நாடுகளுக்கும் இந்த இசைப் பயணத்தை விரிவுபடுத்த ஹிப் ஹாப் தமிழா திட்டமிட்டுள்ளது. இதனால் மலேசிய ரசிகர்கள் இந்த இசை நிகழ்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டு விற்பனை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் நடைபெறவுள்ள இந்தப் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி, 2027ஆம் ஆண்டின் முக்கிய இசை நிகழ்வுகளில் ஒன்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-யாழினி வீரா



