
சென்னை, நவம்பர் 22:தொடர்ச்சியாக மூன்று திரைப்படங்கள் வெற்றியடைந்த மகிழ்ச்சியில் இருக்கும் நடிகர் சூர்யா, தனது சமீபத்திய திரைப்படமான ‘சீன்’ படத்திற்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் நன்றி தெரிவித்து காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த ஆண்டு வெளியான ‘கருப்பு’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, ஜித்து மாதவன் இயக்கத்தில் வெளியான ‘சீன்’ திரைப்படமும் வெற்றிப் படமாக அமைந்துள்ளது. இதன் மூலம் சூர்யா தொடர்ந்து மூன்று வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார்.நகைச்சுவையும் வித்தியாசமான கதைக்களமும் கொண்ட இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், வசூலில் குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்துள்ளது.
உலகளவில் ரூ.260 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடியைக் கடந்துள்ளது.இந்நிலையில், சூர்யா வெளியிட்டுள்ள காணொளியில் ரசிகர்களின் ஆதரவுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.திரையரங்குகளுக்கு நேரில் வந்து படத்தைப் பார்த்ததுடன், அதைக் கொண்டாடி, விமர்சனங்களைப் பகிர்ந்து, கதையின் பல்வேறு அம்சங்களை அலசி ஆராய்ந்து பெரும் வெற்றியைத் தேடித்தந்துள்ளதாக ரசிகர்களைப் பாராட்டியுள்ளார்.
பொதுவாக ஒரு திரைப்படம் வெற்றிபெறும்போது அதில் பணியாற்றிய கலைஞர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் மகிழ்ச்சியடைவார்கள். ஆனால், இந்த முறை தங்களைவிட ரசிகர்களே அதிக மகிழ்ச்சியுடன் வெற்றியைக் கொண்டாடியதாகக் குறிப்பிட்ட சூர்யா, அதற்குத் தனது மனமார்ந்த நன்றியையும் மரியாதையையும் தெரிவித்துள்ளார்.மேலும், திரையரங்கு உரிமையாளர்கள், பத்திரிகையாளர்கள், திரைப்பட விமர்சகர்கள், சமூக ஊடகப் பிரபலங்கள், நலம் விரும்பிகள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டை மிகவும் சிறப்பானதாக மாற்றிய அனைவருக்கும் நன்றி கூறியுள்ள சூர்யா, அடுத்ததாக இன்னும் சிறந்த திரைப்படத்துடன் ரசிகர்களைச் சந்திப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.தொடர்ச்சியான வெற்றிகளுக்குப் பிறகு சூர்யா வெளியிட்டுள்ள இந்த நன்றிக் காணொளி அவரது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.


