Tazhal Media – தழல் மீடியா

/ Nov 23, 2026
Latest News
tms

மலேசியாவுடன் உறவை மேலும் வலுப்படுத்த சீனா தயார்! பிரதமர் அன்வாரிடம் அதிபர் ஜி ஜின்பிங் உறுதி

ஷென்சென், நவம்பர் 22:மலேசியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகம், கல்வி, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய ஒத்துழைப்பு வாய்ப்புகளை உருவாக்க சீனா தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். சீனாவின் குவாங்டோங் மாகாணத்தில் உள்ள ஷென்சென் நகரில், நவம்பர் 20ஆம் தேதி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமைச் சந்தித்தபோது அவர் இந்த உறுதிப்பாட்டை வழங்கினார்.

இரு நாடுகளின் உறவுகள் அரசியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புடன் மட்டுப்படுத்தப்படாமல், பொதுமக்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும் வகையில் மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்பதையும் ஜி ஜின்பிங் வலியுறுத்தினார்.குறிப்பாக, முக்கிய வளர்ச்சித் திட்டங்களைத் தரமான முறையில் செயல்படுத்துதல், வேளாண் பொருட்களின் வர்த்தகத்தை அதிகரித்தல், கல்வி மற்றும் சுற்றுலாத் துறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றில் இரு நாடுகளும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அதேவேளையில், மலேசியாவும் சீனாவும் தங்களது இறையாண்மை, தேசியப் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி சார்ந்த நலன்களைப் பாதுகாப்பதில் பரஸ்பர ஆதரவைத் தொடர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.கடந்த 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரு நாடுகளும் எட்டிய முக்கிய உடன்பாட்டைத் தொடர்ந்து, மலேசியா–சீனா உறவுகள் புதிய கட்டத்தை எட்டியுள்ளதாக ஜி ஜின்பிங் குறிப்பிட்டார்.

இருதரப்பு உறவுகளின் அடுத்த 50 ஆண்டுகளை நோக்கிய புதிய ஒத்துழைப்புக் காலகட்டமாக இது கருதப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும், ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு உள்ளிட்ட அனைத்துலக அமைப்புகளின் வழியாக இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.குறிப்பாக, உலகளாவிய நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் வளரும் நாடுகளின் பொதுநலன்களைப் பாதுகாக்கும் முயற்சிகளில் மலேசியாவும் சீனாவும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, ஷென்சென் நகரில் நடைபெற்ற 33ஆவது ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் அன்வார் கலந்துகொண்டிருந்தார்.அந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இருதரப்புச் சந்திப்பு, மலேசியா–சீனா உறவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான முக்கிய கலந்துரையாடலாக அமைந்தது.

Scroll to Top