Tazhal Media – தழல் மீடியா

/ Nov 23, 2026
Latest News
tms

முகநூல் முதலீட்டு விளம்பரத்தை நம்பிய இல்லத்தரசி! RM111,631 பணத்தை இழந்தார்

கோலா திரெங்கானு, நவம்பர் 22:குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் என்ற ஆசை வார்த்தைகளை நம்பி இணையவழி முதலீட்டுத் திட்டத்தில் பணம் செலுத்திய 56 வயது இல்லத்தரசி ஒருவர் RM111,631.25 தொகையை இழந்துள்ளார்.முகநூலில் வெளியிடப்பட்ட முதலீட்டு விளம்பரத்தின் மூலமாகவே இந்த மோசடி தொடங்கியுள்ளது.

அதிக வருமானம் கிடைக்கும் என்ற விளம்பரத்தைப் பார்த்த அந்தப் பெண், கூடுதல் விவரங்களை அறிந்துகொள்வதற்காக விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த நபரை வாட்ஸ்அப் வழியாகத் தொடர்புகொண்டுள்ளார்.முதலீடு செய்வதற்கான நடைமுறைகள் மற்றும் தேவைகள் குறித்து அந்த நபர் வழங்கிய தகவல்களை நம்பிய அவர், தனது சேமிப்புப் பணத்தைப் பயன்படுத்தி முதலீடு செய்ய முடிவு செய்துள்ளார்.இதனைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் 15ஆம் தேதி முதல் நவம்பர் 16ஆம் தேதி வரையிலான காலப்பகுதியில், ஆறு வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 16 முறை பணப் பரிமாற்றங்களை மேற்கொண்டுள்ளார். இவ்வாறு மொத்தம் RM111,631.25 செலுத்தியுள்ளார்.

பணம் முழுமையாகச் செலுத்தப்பட்ட பின்னரும் அவருக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட முதலீட்டு வருமானம் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபரைத் தொடர்புகொள்ள முயன்றபோதும் முடியாமல் போனது.இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண், நவம்பர் 21ஆம் தேதி காலை 11.30 மணியளவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து கோலா திரெங்கானு மாவட்டக் காவல் தலைவர் உதவி ஆணையர் அஸ்லி முகமட் நூர் தகவல் தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாகக் குற்றவியல் சட்டத்தின் 420ஆவது பிரிவின் கீழ் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.முகநூல் மற்றும் பிற சமூக வலைத்தளங்களில் அதிக லாபம் தருவதாகக் கூறப்படும் முதலீட்டு விளம்பரங்களை நம்பி பணத்தை இழக்கும் சம்பவங்கள் தொடர்பாக இச்சம்பவம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது

Scroll to Top