
மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கமான பிரிமாஸ் (PRIMAS) உறுப்பினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதுடன், அவர்களுக்கு எல்லா வகையிலும் உதவிக்கரம் நீட்டுவதே தனது முக்கிய நோக்கம் என்று தலைவர் பதவிக்குப் போட்டியிடும் டாக்டர் சின்னையா அழகன் (டாக்டர் சீனு) தெரிவித்துள்ளார்.
டாக்டர் சீனு தலைமையில் களமிறங்கியுள்ள டீம் டாக்டர் சீனு அணியினர், தேர்தலில் எண் 2-இல் போட்டியிடுகின்றனர்.
உணவக உரிமையாளர்கள் தங்களது தொழிலை எவ்வித அச்சமுமின்றி நடத்துவதற்குத் தேவையான ஆதரவையும் வழிகாட்டுதலையும் வழங்க முன்னுரிமை அளிக்கப்படும் என்று டாக்டர் சீனு கூறினார்.
குறிப்பாக, உணவகத் துறையில் நிலவி வரும் மாற்று அந்நியத் தொழிலாளர்கள் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காண உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
மேலும், புதிதாக உணவகத் தொழிலைத் தொடங்க விரும்புவோர் பிரிமாஸ் சங்கத்தைத் தங்களது தாய் வீடாகக் கருதி அணுகலாம் என்றும், உணவகம் தொடங்குவதற்கான நடைமுறைகள், ஆலோசனைகள் மற்றும் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கத் தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
உணவகத் துறையில் 48 ஆண்டுகால அனுபவம் கொண்டுள்ள தாம், அந்த அனுபவத்தையும் தொழில் சார்ந்த அறிவையும் சங்க உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டு, அவர்களின் வளர்ச்சிக்குப் பங்களிக்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, டீம் டாக்டர் சீனு அணியின் வேட்பாளர் விவரங்கள் வருமாறு:
- தலைவர்: டாக்டர் சின்னையா அழகன்
- துணைத் தலைவர்: சண்முகம்
- உதவித் தலைவர்: லிங்கம்
- செயலாளர்: தயாளன்
- பொருளாளர்: பூபாலன்
துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சண்முகம் பேசுகையில், உணவக உரிமையாளர்களின் நலன்களையும் சங்கத்தின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு அனைத்து உறுப்பினர்களும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
“ஒற்றுமையாக இருப்போம்… உயர்வோம்!” என்ற முழக்கத்துடன் தேர்தல் களத்தில் இறங்கியுள்ள டீம் டாக்டர் சீனு அணியினர், பிரிமாஸ் உறுப்பினர்களின் ஆதரவைக் கோரியுள்ளனர்.




