
குலாய், நவம்பர் 22:நீண்டகாலமாகப் பழகி வந்த நண்பர் என நம்பிய ஒருவரின் பணம் கடன் மற்றும் முதலீட்டுத் திட்டத்தில் சிக்கி, 29 வயதுடைய நிர்வாக அதிகாரி ஒருவர் RM617,159 தொகையை இழந்துள்ளார்.கார் உதிரிப்பாகங்கள் விற்பனைத் தொழிலில் பங்குதாரராகச் சேர்த்துக்கொள்வதாகக் கூறி, 45 விழுக்காடு முதலீட்டு லாபம் வழங்கப்படும் என ஆசை காட்டி இந்த மோசடி நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர் 2018ஆம் ஆண்டு முதல் சந்தேக நபரை அறிந்திருந்ததாக குலாய் மாவட்டக் காவல் தலைவர் ஏசிபி டான் செங் லீ தெரிவித்தார். கடந்த 2022ஆம் ஆண்டு முதல் சந்தேக நபர் அவரிடம் பணம் கடனாகக் கேட்கத் தொடங்கியுள்ளார்.பின்னர், 2024ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி கார் உதிரிப்பாகங்கள் விற்பனைத் தொழிலில் பங்குகளை வாங்கி முதலீடு செய்யும் வாய்ப்பை முன்வைத்துள்ளார். ஓராண்டுக்குள் 45 விழுக்காடு லாபம் கிடைக்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.நண்பர் மீதான நம்பிக்கையின் காரணமாகப் பாதிக்கப்பட்டவர் பணம் வழங்கவும் முதலீடு செய்யவும் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி முதல் 2026ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி வரை ஆறு உள்ளூர் வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் 72 முறை இணையவழிப் பணப் பரிமாற்றங்களைச் செய்துள்ளார். இவ்வாறு மொத்தம் RM617,159 வழங்கப்பட்டுள்ளது.ஆனால், கொடுத்த கடன் தொகையையும் முதலீட்டுக்கான லாபத்தையும் திரும்பப் பெற முடியாத நிலையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும், தொடர்புகொள்ள முயன்றபோது சந்தேக நபர் தனது தொலைபேசி எண்ணைத் தடை செய்திருப்பதையும் அவர் கண்டறிந்துள்ளார்.
இதையடுத்து, கடந்த நவம்பர் 21ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இச்சம்பவம் தொடர்பாக குற்றவியல் சட்டம் பிரிவு 420இன் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒன்று முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்கப்படலாம் எனக் காவல்துறை தெரிவித்துள்ளது.



