Tazhal Media – தழல் மீடியா

/ Nov 23, 2026
Latest News
tms

அம்பாங் மருத்துவமனையில் நோயாளிகள் கூட்டம் அதிகரிப்பு! வார்டு படுக்கைக்காக மூன்று நாட்கள் காத்திருந்த நோயாளி

பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 22:சிலாங்கூர் மாநிலத்திலுள்ள அம்பாங் மருத்துவமனையின் அவசர மற்றும் விபத்துப் பிரிவில் நோயாளிகளின் வருகை திடீரென அதிகரித்துள்ளதால், மருத்துவமனையில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் மேலதிக சிகிச்சைக்காக வார்டுகளில் அனுமதிக்கப்பட வேண்டிய நோயாளிகள் படுக்கை கிடைக்கும் வரை நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலைமை குறித்து சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவமனையின் அவசரப் பிரிவில் உள்ள மஞ்சள் மண்டலத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை வழக்கமான தினசரி சராசரியைவிட 25 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.சமூக வலைத்தளமான Threads-இல் ஒருவர் பகிர்ந்த அனுபவம் இந்த விவகாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலையில், வார்டில் படுக்கை கிடைக்காத காரணத்தால் மூன்று நாட்களாகக் காத்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள இடங்கள் பெரும்பாலும் நோயாளிகளுக்கான படுக்கைகள் மற்றும் தற்காலிகப் படுக்கைகளால் நிரம்பியிருந்ததாகவும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.இதற்கிடையில், நோயாளிகளின் அதிகரிப்பைச் சமாளிக்க மருத்துவமனை நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை கூறியுள்ளது.நோயாளிகளை வார்டுகளில் அனுமதிக்கும் நடைமுறைகளும், மருத்துவமனையிலிருந்து வெளியேற்றும் செயல்முறைகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், வெளியேற்றத்திற்காகக் காத்திருக்கும் நோயாளிகளுக்கான வசதிகள் சிறப்பாகப் பயன்படுத்தப்படுவதுடன், பணியாளர்களும் தேவைக்கேற்ப மறுபகிர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Scroll to Top