Tazhal Media – தழல் மீடியா

/ Nov 25, 2026
Latest News
tms

“சுங்கை பூலோ சிறையிலும் எனக்கு நூல்களை அனுப்பியவர்!” – ஏ. சமாட் சைட்டை நினைவுகூர்ந்த பிரதமர் அன்வார்

கோலாலம்பூர், நவம்பர் 25:மறைந்த தேசிய இலக்கியவாதி டத்தோஸ்ரீ ஏ. சமாட் சைட், தமக்கு நீண்டகாலமாக உறுதுணையாக இருந்த உண்மையான நண்பர் என்றும், அவரது மறைவு மலேசியாவுக்கு மிகப்பெரிய இழப்பு என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூர் பங்சாரில் உள்ள மஸ்ஜித் சைதினா அபு பக்கர் அல்-சித்திக் பள்ளிவாசலில் வைக்கப்பட்டிருந்த ஏ. சமாட் சைட்டின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது பிரதமர் இதனைத் தெரிவித்தார்.தாம் சுங்கை பூலோ சிறையில் இருந்த காலத்திலும் ஏ. சமாட் சைட் தனது படைப்புகளையும் வாசிப்புப் பொருட்களையும் தொடர்ந்து அனுப்பி வந்ததை அன்வார் நினைவுகூர்ந்தார். இருவருக்கும் இடையிலான நட்பு கடிதப் பரிமாற்றங்கள் மூலமாகவும் நீடித்ததாக அவர் குறிப்பிட்டார்.

1955ஆம் ஆண்டு முதலே கவிதைகள் மூலம் புகழ்பெற்றிருந்த பாக் சமாட், கலை மற்றும் இலக்கியத்தின் மீது ஆழ்ந்த பற்றுக் கொண்டவர் மட்டுமின்றி, ஒரு சிறந்த சமூகக் கல்வியாளராகவும் விளங்கினார் என்று பிரதமர் புகழாரம் சூட்டினார்.மேலும், மறைந்த இலக்கியவாதியின் வாசிப்புப் பழக்கமும் அறிவைத் தேடும் ஆர்வமும் தமக்கு மிகுந்த வியப்பை ஏற்படுத்தியதாக அன்வார் தெரிவித்தார். அவரது இல்லத்தில் இருந்த நூல்களைப் பார்வையிட்டபோது, ஒவ்வொரு புத்தகத்திலும் அவர் குறிப்புகளை எழுதி வைத்திருந்ததை நேரில் கண்டதாகவும் கூறினார்.

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இலக்கியப் படைப்புகளைத் தேடிப் படித்து, அவற்றின் கருத்துகளை ஆழமாகப் புரிந்துகொள்ளும் தனித்துவமான ஆற்றல் அவரிடம் இருந்ததாகவும், குறிப்பாக இலக்கிய அறிவில் அவருக்கு நிகரான ஒருவரைக் கண்டறிவது எளிதானதல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.இலக்கியம் என்பது தனித்துவமான ஒரு துறையாக மட்டும் பார்க்கப்படக் கூடாது என்றும், ஒரு சமூகத்தின் அடையாளத்தையும் நாகரிக வளர்ச்சியையும் கட்டியெழுப்புவதில் இலக்கியத்திற்கு முக்கிய இடமுண்டு என்றும் பாக் சமாட் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாக அன்வார் தெரிவித்தார்.

இதற்கிடையில், இத்தகைய தேசிய இலக்கிய ஆளுமைகளின் பங்களிப்பையும் அந்தஸ்தையும் உயர்த்துவதற்கான வழிமுறைகள் குறித்து அரசாங்கம் சிந்திக்க வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.ஏ. சமாட் சைட்டின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த பிரதமர், அவரது இலக்கியப் பணிகளும் அறிவுசார் பங்களிப்புகளும் எதிர்காலத் தலைமுறையினருக்கும் தொடர்ந்து வழிகாட்டும் எனக் குறிப்பிட்டார்.

Scroll to Top