Tazhal Media – தழல் மீடியா

/ Nov 25, 2026
Latest News
tms

RM200 பள்ளி உதவித்தொகை பெற பெற்றோர் நேரில் வர வேண்டும்! வராவிட்டால் பணம் வழங்க வேண்டாம் – பிரதமர் அன்வார்

புத்ராஜெயா, நவம்பர் 25:2027ஆம் ஆண்டு பள்ளி அமர்வுக்கான ஆரம்பப் பள்ளி உதவித்தொகையான RM200-ஐப் பெறுவதற்கு மாணவர்களின் பெற்றோர் நேரடியாகப் பள்ளிக்கு வர வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.பெற்றோருக்கு நேரடியாக வீட்டிற்கு பணத்தை அனுப்புவதற்குப் பதிலாக, பள்ளியில் வைத்து உதவித்தொகையை வழங்க வேண்டும் என்றும், இதன் மூலம் பெற்றோர்கள் ஆசிரியர்களைச் சந்தித்து தங்களது பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் மற்றும் ஒழுக்கம் குறித்து அறிந்துகொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற தேசியக் கல்விக்கான செயற்கை நுண்ணறிவு முன்னெடுப்பான ‘AI Temu AI’ திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றியபோது பிரதமர் இதனைத் தெரிவித்தார்.கல்வி அமைச்சிடம் இந்த நடைமுறையை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பெற்றோர் பள்ளிக்கு வராவிட்டால் உதவித்தொகையை வழங்க வேண்டாம் என்றும் கல்வி அமைச்சரிடம் வலியுறுத்தினார்.2027ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கப்படும் ஆரம்பப் பள்ளி உதவித்தொகை RM150-லிருந்து RM200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாடு முழுவதும் சுமார் 5.3 மில்லியன் மாணவர்கள் பயனடைவார்கள். இதற்காக அரசாங்கம் RM1 பில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளது.மேலும், பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒன்றாகச் சந்திக்கும் கலந்துரையாடல் அமர்வுகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார். இதன் மூலம் மாணவர்களின் கல்வி நிலை, நடத்தை மற்றும் ஒழுக்கம் தொடர்பான விவரங்களை ஆசிரியர்கள் பெற்றோருடன் பகிர்ந்துகொள்ள முடியும் என்றார்.பிள்ளைகளின் கல்வி மற்றும் ஒழுக்கத்தை உருவாக்கும் பொறுப்பை முழுமையாகப் பள்ளிகளிடம் ஒப்படைத்துவிடக் கூடாது என்றும், பெற்றோர்களும் ஆசிரியர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் நினைவூட்டினார்.

இதற்கிடையில், அடுத்த மாதம் தொடங்கும் பள்ளி விடுமுறைக் காலத்தில் ஒவ்வொரு மாணவரும் குறைந்தது இரண்டு புத்தகங்களையாவது வாசித்து முடிப்பதை உறுதிப்படுத்துமாறு கல்வி அமைச்சிடம் பிரதமர் கேட்டுக்கொண்டார்.கல்வி என்பது பாட அறிவைப் பெறுவதுடன் முடிவடையாமல், நல்ல பண்புகள், ஒழுக்கம் மற்றும் பொறுப்புணர்வு கொண்ட தலைமுறையை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Scroll to Top