Tazhal Media – தழல் மீடியா

/ Nov 25, 2026
Latest News
tms

பாப்பகோமோ விவகாரம்: கூகுள் நிறுவனத்திடம் RM300 மில்லியன் இழப்பீடு கோரி MCMC வழக்குத் தாக்கல்!

கோலாலம்பூர், நவம்பர் 25:யூடியூப் தளத்தில் பாப்பகோமோ என அறியப்படும் வான் முஹம்மது அஸ்ரி வான் டெரிஸ் வெளியிட்டதாகக் கூறப்படும் அவதூறு மற்றும் தவறான தகவல்கள் தொடர்ந்து பரவிய விவகாரத்தில், கூகுள் நிறுவனத்திற்கு எதிராக மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC, RM300 மில்லியன் இழப்பீடு கோரி வழக்குத் தொடர்ந்துள்ளது.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட கூகுள் எல்.எல்.சி. நிறுவனத்திற்கு எதிராக, கடந்த அக்டோபர் 23ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் MCMC இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி, வான் முஹம்மது அஸ்ரி தொடர்பான சில உள்ளடக்கங்கள் யூடியூப் தளத்தில் மறுபதிவு செய்யப்பட்டு பரப்பப்படுவது குறித்து புகார் கிடைத்ததாக MCMC தனது வழக்கில் குறிப்பிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அக்டோபர் 19ஆம் தேதி கூகுள் நிறுவனத்திற்கு அறிவிப்பு அனுப்பப்பட்டதாகவும், 1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் மற்றும் அதன் உரிம நிபந்தனைகளின்படி கூகுள் தனது சட்டப்பூர்வக் கடமைகளை நிறைவேற்றத் தவறியதாகவும் ஆணையம் குற்றஞ்சாட்டியுள்ளது.மேலும், சர்ச்சைக்குரிய காணொளிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்துவதிலும், அவற்றை அகற்றுவதிலும் கூகுள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பது MCMC-யின் மற்றொரு குற்றச்சாட்டாகும்.இதனால், நாட்டின் தலைவர்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்கள் தொடர்பான பொதுமக்களின் பார்வையும் நம்பிக்கையும் பாதிக்கப்பட்டதாக MCMC தனது மனுவில் தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட உள்ளடக்கங்கள் பொய்யானவை, தவறாக வழிநடத்தக்கூடியவை மற்றும் ஆதாரமற்றவை என்றும் அது குறிப்பிட்டுள்ளது.இதன் அடிப்படையில், பாப்பகோமோவின் யூடியூப் கணக்கைத் தொடர்ந்து முடக்கி வைக்கவும், அவரைச் சார்ந்த அல்லது அவரைக் குறிப்பிடும் இதுபோன்ற உள்ளடக்கங்களை 24 மணி நேரத்திற்குள் கண்டறிந்து அகற்றவும் கூகுளுக்கு எதிராகத் தடை உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என MCMC கோரியுள்ளது.அத்துடன், பொதுவான இழப்பீடு, அதிகரிக்கப்பட்ட இழப்பீடு மற்றும் முன்மாதிரி இழப்பீடு எனத் தலா RM100 மில்லியன் வீதம் மொத்தம் RM300 மில்லியன் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நிர்வாகம் வரும் டிசம்பர் 8ஆம் தேதி இணையவழி முறைமையில் நடைபெறவுள்ளது.இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் MCMC நீதிமன்றத்தில் முன்வைத்துள்ள வாதங்களாகும். வழக்கின் இறுதி முடிவு இன்னும் நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்படவில்லை.

Scroll to Top