
கோலாலம்பூர், நவம்பர் 25:மலேசியாவில் மானியமில்லா பெட்ரோல் மற்றும் டீசல் பயன்படுத்தும் வாகனமோட்டிகளுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், ரோன் 97, மானியமில்லா ரோன் 95 மற்றும் மானியமில்லா டீசல் ஆகியவற்றின் விலை லிட்டருக்கு 25 காசு குறைக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய விலை நவம்பர் 26ஆம் தேதி முதல் டிசம்பர் 2ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.தானியங்கி விலை நிர்ணய முறையின் (APM) அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாற்றத்தின்படி, ரோன் 97 பெட்ரோல் விலை RM4.00 இலிருந்து RM3.75 ஆகக் குறைகிறது. மானியமில்லா ரோன் 95 விலை RM3.72 இலிருந்து RM3.47 ஆகவும், மானியமில்லா டீசல் விலை RM4.72 இலிருந்து RM4.47 ஆகவும் குறைக்கப்படுகிறது.எனினும், தகுதியுடைய பயனாளர்களுக்கான மானிய விலையில் எந்த மாற்றமும் இல்லை.
BUDI95 திட்டத்தின் கீழ் ரோன் 95 பெட்ரோலை லிட்டருக்கு RM1.99 என்ற விலையில் தொடர்ந்து பெறலாம். இதற்காக அரசாங்கம் லிட்டருக்கு RM1.48 அல்லது 43 விழுக்காடு மானியத்தை வழங்குகிறது.அதேபோல், BUDI Diesel திட்டத்தின் கீழ் தகுதியுடையவர்கள் டீசலை லிட்டருக்கு RM2.10 என்ற விலையில் தொடர்ந்து பெறுவார்கள். இதில் அரசாங்கம் லிட்டருக்கு RM2.37 அல்லது 53 விழுக்காடு மானியத்தை ஏற்கிறது.மேலும், மானிய விலை பெட்ரோல் கட்டுப்பாட்டு முறையின் (SKPS) கீழ் விலை RM2.05 ஆகவும், மானிய விலை டீசல் கட்டுப்பாட்டு முறையின் (SKDS) கீழ் விலை RM2.15 ஆகவும் மாற்றமின்றித் தொடரும்.
பிராந்தியச் சந்தைகளில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலை அழுத்தம் குறைந்துள்ளதும், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பும் சர்வதேச எண்ணெய் விலைகள் குறைவதற்குக் காரணமாக அமைந்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.இருப்பினும், சில சந்தைகளில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் விநியோகத்தில் இன்னும் கட்டுப்பாடுகள் நிலவுகின்றன.
புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை மற்றும் எண்ணெய் போக்குவரத்தில் ஏற்படக்கூடிய தடைகள் காரணமாக உலகச் சந்தையில் விலை ஏற்ற இறக்கங்கள் தொடரலாம் என்றும் அமைச்சு எச்சரித்துள்ளது.இதற்கிடையில், வாழ்க்கைச் செலவு அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில், அடுத்த ஆண்டுக்கான எரிபொருள் மானியங்களுக்கு ஏறத்தாழ RM40 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.தகுதியுடைய மலேசியர்கள் BUDI95 மற்றும் BUDI Diesel திட்டங்களின் கீழ் மாதாந்திரத் தகுதி வரம்புகளுக்கு உட்பட்டு மை கார்டைப் பயன்படுத்தி மானிய விலையில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ளலாம்.



