
கோலாலம்பூர், நவம்பர் 25:மக்களின் குரலை ஒடுக்க முயன்ற காலத்திலும் கவிதை வழியாகத் தனது எதிர்ப்பையும் கொள்கை உறுதியையும் வெளிப்படுத்தியவர் மறைந்த தேசிய இலக்கியவாதி டத்தோ ஸ்ரீ ஏ. சமத் சைத் எனப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் புகழாரம் சூட்டியுள்ளார். மொழி மற்றும் இலக்கியத்தின் வலிமை ஒரு சமூகத்தைத் துணிச்சலும் மாண்பும் கொண்டதாக உருவாக்கும் என்பதைத் தனது வாழ்வின் வழியாக ஏ. சமத் சைத் உணர்த்தியதாக அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட இரங்கல் பதிவில், மறைந்த சைதின் கொள்கைப் பிடிப்பையும் மொழி, இலக்கியத்தின் மீதான ஆழமான பற்றையும் தாம் என்றும் நினைவில் வைத்திருப்பேன் என அன்வார் தெரிவித்துள்ளார்.சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்னர் கோலாலம்பூர் மெர்டேக்கா விளையாட்டரங்கில் நடைபெற்ற மக்கள் எழுச்சிப் பேரணியில், ஏ. சமத் சைத் ‘Di Atas Padang Sejarah’ என்ற கவிதையைப் பாடிய தருணத்தையும் பிரதமர் நினைவுகூர்ந்தார்.அப்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் ஒலித்த அந்தக் கவிதை வரிகள், அநீதிக்கு எதிராகத் துணிந்து குரல் கொடுக்கவும் தொடர்ந்து போராடவும் மக்களுக்கு உத்வேகம் அளித்ததாக அன்வார் தெரிவித்தார்.
மக்களின் குரல்கள் ஒடுக்கப்பட்டு, அதிகாரக் கட்டமைப்புகள் எதிர்ப்புக் குரல் எழுப்பியவர்களை அடக்கப் பயன்படுத்தப்பட்ட சூழலிலும், ஏ. சமத் சைத் கவிதையையே தனது எதிர்ப்புக் கருவியாகத் தேர்ந்தெடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.“அந்த உணர்வு எமது போராட்டப் பயணத்தில் தொடர்ந்து துணையாக இருக்கும். அமைதியாக ஓய்வெடுங்கள், பாக் சமத். அல்-ஃபாத்திஹா” எனவும் பிரதமர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 24ஆம் தேதி மாலை 6.10 மணிக்கு, கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஏ. சமத் சைத் காலமானார். அவருக்கு வயது 91.1935ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி மலாக்கா, துரியான் துங்கல், கம்போங் பெலிம்பிங் டாலாமில் பிறந்த அவர், 1985ஆம் ஆண்டு தேசிய இலக்கிய விருதைப் பெற்ற நான்காவது இலக்கியவாதி என்ற பெருமையைப் பெற்றவர்.‘சலினா’, ‘சுங்கை மெங்கலிர் லெசு’, ‘ஹுஜான் பாகி’ உள்ளிட்ட புகழ்பெற்ற நாவல்கள் மூலம் மலாய் இலக்கிய உலகில் தனித்த அடையாளத்தைப் பதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.அவரது உடல் நவம்பர் 25ஆம் தேதி காலை 10.55 மணிக்கு கோலாலம்பூர் புக்கிட் கியாரா முஸ்லிம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.



