
கோலாலம்பூர், நவம்பர் 25:மலேசியர்கள் தங்களது அடையாள அட்டையை (MyKad) கைத்தொலைபேசி வழியாக டிஜிட்டல் வடிவில் பயன்படுத்தும் வசதியை அறிமுகப்படுத்துவதற்கான சட்டத் திருத்தங்கள் குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார். தற்போதுள்ள சட்டங்கள் அடையாள அட்டையை டிஜிட்டல் வடிவில் காட்சிப்படுத்த அனுமதிக்கவில்லை. ஆனால், சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) வழங்கும் வாகன ஓட்டுநர் உரிமத்தைப் போல அடையாள அட்டையையும் கைத்தொலைபேசியில் காண்பிக்கும் வசதியை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறினார்.
MyKad மட்டுமின்றி, கடவுச்சீட்டு, பிறப்புச் சான்றிதழ் மற்றும் திருமணச் சான்றிதழ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களையும் ஒரே செயலியில் ஒருங்கிணைப்பதற்கான திட்டம் முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தின் இறுதிக்கட்ட உரையை நாடாளுமன்றத்தில் நிகழ்த்தியபோது கோபிந்த் இதனைத் தெரிவித்தார்.பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அறிவுறுத்தலுக்கு இணங்க, அரசாங்கச் சேவைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் முயற்சிகள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்பில் GovTech, MyGOV மற்றும் MyDigital ID பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தில் MyDigital ID என்பது பயனர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் தளமாகச் செயல்படும். அதேவேளையில், MyGOV செயலி பல்வேறு அரசாங்கச் சேவைகளை ஒரே இடத்தில் அணுகுவதற்கான மைய நுழைவாயிலாக அமையும்.முதற்கட்டமாக தற்போது தனித்தனியாகச் செயல்படும் அரசாங்கச் செயலிகள் MyGOV தளத்தில் ஒருங்கிணைக்கப்படும். அடுத்த கட்டத்தில் கட்டண வசதிகளும் இணைக்கப்பட்டு, கடவுச்சீட்டு புதுப்பித்தல் போன்ற சேவைகளை இணையவழியாகவே மேற்கொள்ளும் வாய்ப்பு உருவாக்கப்படும்.இதற்கிடையில், செயற்கை நுண்ணறிவுத் துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் தேசிய AI கணினி வளப் பரிமாற்றத் திட்டமான NACX உருவாக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், செயற்கை நுண்ணறிவு நிர்வாகச் சட்டமூலம் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.



