
புத்ராஜெயா, நவம்பர் 25:செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் கல்வித்துறையில் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், புத்தக வாசிப்புப் பழக்கத்தை மாணவர்கள் கைவிடக்கூடாது எனப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.ஆண்டு இறுதிப் பள்ளி விடுமுறைக் காலத்தில் ஒவ்வொரு மாணவரும் குறைந்தது இரண்டு புத்தகங்களையாவது வாசித்து முடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனைச் செயல்படுத்தும் வகையில், கல்வி அமைச்சு அனைத்து ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் எனவும் அன்வார் கேட்டுக்கொண்டார்.டிசம்பர் மாதம் தொடங்கும் பள்ளி விடுமுறை ஒன்றரை மாதம் முதல் இரண்டு மாதங்கள் வரை நீடிக்கக்கூடும் என்பதால், அந்தக் காலப்பகுதியில் மாணவர்கள் வாசிக்க வேண்டிய புத்தகங்களின் தலைப்புகளைப் பள்ளிகள் முன்கூட்டியே வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
மேலும், மாணவர்கள் தங்களது விடுமுறைக் காலத்தில் இரண்டு புத்தகங்களை வாசிப்பதாக உறுதியளிக்க வேண்டும் என்றும், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் அந்த உறுதியை நிறைவேற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற தேசிய கல்வி செயற்கை நுண்ணறிவு முன்னெடுப்பான “AI Temu AI” மற்றும் YTL AI Labs உருவாக்கிய “CikguILMU” தளத்தின் தொடக்க விழாவில் உரையாற்றியபோது பிரதமர் இக்கருத்துகளை முன்வைத்தார்.
அதேவேளை, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என்றாலும், அதனுடன் ஒழுக்கம், ஆளுமை மற்றும் மனிதநேயப் பண்புகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என அன்வார் சுட்டிக்காட்டினார்.இந்த நிகழ்வில் தேசிய கல்வி AI முன்னெடுப்பின் கீழ் மூன்று திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவை DELIMa 3.0, கல்வி அமைச்சின் AI எழுத்தறிவு வழிகாட்டி மற்றும் YTL AI Labs உருவாக்கிய Cikgu ILMU தளம் ஆகியவையாகும்.
இந்த மூன்று திட்டங்களும் நாட்டின் டிஜிட்டல் கல்விச் சூழலை வலுப்படுத்துவதுடன், கற்பித்தல் மற்றும் கற்றல் முறைகளை நவீனப்படுத்தவும் மாணவர்களுக்கு மேலும் ஊடாடும் கற்றல் அனுபவத்தை வழங்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.



