
தும்பாட், நவம்பர் 25:மலேசிய ராயல் விமானப்படையின் (TUDM) விமானப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி போதைப்பொருளைக் கடத்தியதாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள விமானி ஒருவர், கடத்தல் நடவடிக்கையின் ஒருங்கிணைப்பாளராகவும் போதைப்பொருளைக் கொண்டு செல்லும் நபராகவும் செயல்பட்டதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு இயக்குநர் டத்தோ ஹுசைன் ஒமார் கான் இதனைத் தெரிவித்துள்ளார்.
விசாரணையில், சம்பந்தப்பட்ட விமானி சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் பகுதிகளை உள்ளடக்கிய கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்து சபாவுக்கு போதைப்பொருள் விநியோகத்தை எடுத்துச் செல்லும் பொறுப்பையும் வகித்திருப்பது தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, கடத்தப்பட்ட போதைப்பொருட்கள் லாபுவான் மற்றும் தாவாவ் பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இருப்பினும், வேறு இடங்களுக்கும் அவை விநியோகிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.இந்தக் கடத்தல் நடவடிக்கையில் இதுவரை மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஏழு பேர் TUDM அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள்; எஞ்சிய ஆறு பேர் பொதுமக்கள் என ஹுசைன் தெரிவித்தார்.இந்தக் கும்பல் தனித்தனி பொறுப்புகளுடன் செயல்பட்டுள்ளதாகவும், அதன் கட்டமைப்பில் தலைமைப் பொறுப்பாளர், ஒருங்கிணைப்பாளர்கள், போதைப்பொருளைக் கொண்டு செல்பவர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் விளக்கினார். மேலும், இந்தக் குழுவுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் சிலரைப் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.கடந்த ஜனவரி மாதம் கிள்ளான் துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ஆறு கொள்கலன்கள் தொடர்பான விசாரணையிலிருந்தே ராணுவப் போக்குவரத்து வசதிகள் பயன்படுத்தப்படுவது குறித்த தகவல்கள் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அந்தக் கொள்கலன்களில் இருந்த போதைப்பொருட்கள் சபாவின் தெலுக் செபாங்கார் பகுதிக்கு அனுப்பப்படவிருந்ததாகச் சந்தேகிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து ஜூலை மாதம் போலீசாருக்குக் கூடுதல் தகவல்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில் விசாரணையும் உளவுத்துறை கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டன.கடந்த வாரம் சுபாங் விமானப்படைத் தளத்தில் TUDM விமானத்தில் ஏற்றப்படவிருந்த ஐந்து பயணப் பெட்டிகள் மற்றும் ஒரு பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 96.64 கிலோகிராம் மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் மதிப்பு RM4.83 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 6.98 கிலோகிராம் திரவ இரசாயனப் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது.வழக்கமான பாதுகாப்புச் சோதனையின்போது இந்தக் கடத்தல் முயற்சி கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் லாபுவான் பகுதிகளில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.சம்பந்தப்பட்ட அனைவரின் பங்களிப்பையும், கடத்தல் நடவடிக்கையின் முழுமையான பின்னணியையும் கண்டறியும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



