
கோலாலம்பூர், நவம்பர் 25:2027ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் மலேசியாவுக்கு வருகை தரும் இந்தியக் குடிமக்கள் கட்டாயம் விசா பெற்றிருக்க வேண்டும் என மலேசியக் குடிநுழைவுத் துறை அறிவித்துள்ளது. இதற்கான விசா விண்ணப்பங்களை வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் MyVISA இணையவழி தளம் மூலம் சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசா விலக்கு வசதி டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைவதால் இந்த மாற்றம் நடைமுறைக்கு வருகிறது.
Zdஇதன்படி, 2027 ஜனவரி 1 முதல் மலேசியாவுக்குள் நுழைய விரும்பும் இந்தியப் பயணிகள் பயணத்திற்கு முன்பே செல்லுபடியாகும் விசாவைப் பெற்றிருக்க வேண்டும்.குடிநுழைவுத் துறை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விசா விண்ணப்பத்திற்காகச் செலுத்தப்படும் கட்டணங்கள் எக்காரணம் கொண்டும் திரும்ப வழங்கப்பட மாட்டாது என எச்சரித்துள்ளது. விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அல்லது நிராகரிக்கப்பட்டாலும், கொள்கை மாற்றங்கள் ஏற்பட்டாலும், பயணத் திட்டங்கள் மாற்றப்பட்டாலும் செலுத்திய விசா கட்டணம் திரும்பப் பெற முடியாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.மேலும், மலேசிய அரசாங்கத்தின் உத்தரவுகளுக்கு ஏற்ப நுழைவு நிபந்தனைகளை எந்த நேரத்திலும் திருத்துவதற்குக் குடிநுழைவுத் துறைக்கு அதிகாரம் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட தகவலின்படி, இந்தியக் குடிமக்களுக்கு குறுகியகால சமூக வருகைக்காக வழங்கப்பட்ட 30 நாட்கள் விசா விலக்கு வசதி டிசம்பர் 31ஆம் தேதியுடன் நிறுத்தப்படுகிறது.வெளிநாட்டுப் பயணிகளின் வருகைக்கு முந்தைய பாதுகாப்புச் சோதனைகளை வலுப்படுத்துவதும், நாட்டின் எல்லைக் கட்டுப்பாட்டு நடைமுறைகளை மேலும் ஒழுங்குபடுத்துவதும் இந்த முடிவின் நோக்கம் என அவர் விளக்கியுள்ளார்.
எனவே, 2027ஆம் ஆண்டு மலேசியாவுக்குப் பயணம் செய்யத் திட்டமிடும் இந்தியர்கள், டிசம்பர் 1 முதல் MyVISA வழியாக விசாவுக்கு விண்ணப்பித்து, பயணத்திற்கு முன்பே அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.



