Tazhal Media – தழல் மீடியா

/ Nov 25, 2026
Latest News
tms

தேசிய இலக்கியவாதி ஏ. சமாட் சைட் மறைவு! மலேசிய இலக்கியம் மற்றும் கலாசார உலகிற்கு பேரிழப்பு – ஃபஹ்மி

கோலாலம்பூர், நவம்பர் 25:மலேசியாவின் தேசிய இலக்கியவாதி டத்தோஸ்ரீ டாக்டர் ஏ. சமாட் சைட்டின் மறைவு, நாட்டின் இலக்கியம் மற்றும் கலாசாரத் துறைக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என்று தொடர்புத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.

‘பாக் சமாட்’ என்று அன்புடன் அழைக்கப்பட்ட அவர், தனது வாழ்நாள் முழுவதையும் மலாய் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்காக அர்ப்பணித்தவர் என ஃபஹ்மி புகழாரம் சூட்டியுள்ளார்.அவரது பங்களிப்பு வெறும் நூல்களை எழுதுவதுடன் முடிந்துவிடவில்லை. சமூகத்தின் அன்றாட வாழ்க்கை, மக்களின் போராட்டங்கள், ஏற்றத்தாழ்வுகள் மற்றும் ஒரு தேசத்தின் வரலாற்றுப் பயணம் ஆகியவற்றைத் தனது படைப்புகள் வழியாகப் பதிவு செய்தவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது சமூக ஊடகப் பதிவில் இரங்கல் தெரிவித்த ஃபஹ்மி, மறைந்த இலக்கியவாதியின் புகழ்பெற்ற படைப்புகளான ‘சலினா’, ‘சுங்கை மெங்கலிர் லேசு’, ‘ஹுஜான் பாகி’ ஆகியவை மலேசிய இலக்கியக் கருவூலத்தில் என்றும் நிலைத்திருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.அந்தப் படைப்புகளில் மனிதர்களின் வாழ்க்கை, வறுமை, சமூகப் போராட்டங்கள் மற்றும் வாழ்வின் யதார்த்தங்கள் ஆழமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவை அடுத்தடுத்த தலைமுறைகளாலும் வாசிக்கப்பட்டு நினைவுகூரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.மேலும், ஒரு படைப்பாளியின் உடல் மறைந்தாலும் அவரது சிந்தனைகளும் எழுத்துகளும் அவர் முன்னெடுத்த கொள்கைகளும் மறைந்துவிடாது என்று ஃபஹ்மி சுட்டிக்காட்டியுள்ளார்.

பாக் சமாட்டின் படைப்புகள் தொடர்ந்து வாசிக்கப்பட்டு, இளம் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும் வரை அவரது பெயர் மக்கள் மனங்களில் வாழ்ந்துகொண்டே இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏ. சமாட் சைட் கடந்த நவம்பர் 24ஆம் தேதி மாலை 6.01 மணியளவில் தனது 91ஆவது வயதில் காலமானார். மலாக்கா மாநிலத்தின் துரியான் துங்கல் பகுதியில் 1935ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி பிறந்த அவர், மலேசிய நவீன மலாய் இலக்கிய வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியவர்களில் ஒருவராவார்.அவரது மறைவால் துயரத்தில் இருக்கும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஃபஹ்மி தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

Scroll to Top