Tazhal Media – தழல் மீடியா

/ Nov 25, 2026
Latest News
tms

AI செயலிகளால் குழந்தைகளுக்கு ஆபத்தா? பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் திட்டம் – கோபிந்த் சிங் தியோ

கோலாலம்பூர், நவம்பர் 25:குழந்தைகள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்போது அவர்களின் மனநலம், தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கண்காணிக்க மலேசிய அரசாங்கம் புதிய நடவடிக்கைகளைத் திட்டமிட்டு வருகிறது. குறிப்பாக, AI Companion எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தோழமைச் செயலிகளுடன் குழந்தைகள் அதிகமான உணர்வுப்பூர்வமான தொடர்பை ஏற்படுத்திக்கொள்வது குறித்து அரசாங்கம் கவலை கொண்டுள்ளதாக டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் தியோ தெரிவித்துள்ளார்.

நவம்பர் 24ஆம் தேதி மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், குழந்தைகளைப் பாதுகாப்பதற்காகப் புதிய சட்டங்கள் மட்டுமின்றி, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சட்டங்களையும் பயன்படுத்த முடியும் எனக் குறிப்பிட்டார்.இதற்காக 2025ஆம் ஆண்டின் இணையப் பாதுகாப்புச் சட்டம் (சட்டம் 866), 2017ஆம் ஆண்டின் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் (சட்டம் 792) ஆகியவை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அடிப்படையாக அமையும் என அவர் விளக்கினார்.

அதேவேளையில், முன்மொழியப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு ஆளுகைச் சட்டமூலமும் இந்த விவகாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும். AI தொழில்நுட்பத்தை உருவாக்குபவர்கள் மற்றும் அதனைச் செயல்படுத்துபவர்கள் தங்களது செயல்பாடுகளுக்கு ஏற்ப பொறுப்பேற்க வேண்டிய கட்டமைப்பை இந்தச் சட்டமூலம் உருவாக்கும்.மேலும், AI பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் புதிய ஆபத்துகளைப் பதிவு செய்து விசாரிப்பதற்கான சம்பவப் புகார் நடைமுறையையும் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உதவி பெறுவதற்காக ஏற்கெனவே செயல்பட்டு வரும் HEAL 15555 மற்றும் Talian Kasih 15999 ஆகிய உதவி எண்களும் தொடர்ந்து சேவையாற்றும் என அமைச்சர் தெரிவித்தார்.இதற்கிடையில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் பாதுகாப்பை ஆய்வு செய்வதற்கும், அதன் ஆபத்துகளை மதிப்பிடுவதற்கும் மலேசிய AI பாதுகாப்பு நிறுவனமான MY-AiSafe உருவாக்கப்பட்டு வருகிறது.AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைத் தடுக்காமல், அதனைப் பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவதற்கான சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என கோபிந்த் சிங் தியோ தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, குழந்தைகளின் பாதுகாப்பு என்பது தொழில்நுட்ப நிறுவனங்களின் பொறுப்பு மட்டுமல்ல; AI சேவைகளை உருவாக்கி வழங்கும் நிறுவனங்களும் தங்களது கடமைகளை முறையாக நிறைவேற்ற வேண்டும் என்பதில் டிஜிட்டல் அமைச்சகம் உறுதியாக இருப்பதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

Scroll to Top