Tazhal Media – தழல் மீடியா

/ Nov 25, 2026
Latest News
tms

அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திய கணக்காளர்! RM75,000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

கோலா திரெங்கானு, நவம்பர் 25:மராங் மாவட்ட மன்றத்தின் (MDM) மூத்த உதவிக் கணக்காளர் ஒருவர், தனது கணவருக்குச் சொந்தமான நிறுவனத்துக்கு அலுவலக கம்பளம் பொருத்தும் ஒப்பந்தத்தைப் பரிந்துரை செய்து அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திய குற்றத்திற்காக ஓராண்டு சிறைத்தண்டனையும் RM75,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.53 வயதான சசாவதி சாலே என்பவருக்கு எதிராக கோலா திரெங்கானு செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அஸ்மான் முஸ்தபா இந்தத் தண்டனையை விதித்தார்.

வழக்கின் தற்காப்புத் தரப்பு விசாரணையின் முடிவில், குற்றச்சாட்டில் நியாயமான சந்தேகத்தை ஏற்படுத்தத் தவறியதைத் தொடர்ந்து நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி, MDM நிதிப் பிரிவின் அலுவலக இடங்கள் மற்றும் அதிகாரிகளின் அறைகளில் கம்பளம் பொருத்துவதற்காக, எடரான் செபகாட் டிரேடிங் (Edaran Sepakat Trading) நிறுவனத்தின் விலைப்புள்ளியை அவர் பரிந்துரைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்தப் பணியின் ஒப்பந்த மதிப்பு RM10,640 ஆகும்.குறிப்பிட்ட நிறுவனம் அவரது கணவருக்குச் சொந்தமானது என்பதால், அந்தப் பரிந்துரையின் மூலம் அவருக்குச் சொந்த நலன் தொடர்புடையதாக இருந்தது எனக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009-இன் 23(1) பிரிவின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டது.அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக ஏழு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.தண்டனை உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அவரது வழக்கறிஞர் டத்தோ சுக்ரி முகமது மேல்முறையீட்டு முடிவு வரும் வரை தண்டனையை ஒத்திவைக்கக் கோரினார்.

அந்தக் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், மேல்முறையீட்டு அறிவிப்பை முறையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், ஏற்கெனவே இருந்த RM5,000 பிணைத் தொகையுடன் கூடுதலாக RM2,000 செலுத்த வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தது.இந்த வழக்கில் அரசுத் தரப்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் துணை அரசு வழக்கறிஞர் நூர் அமலினா நஜ்வா முகமது அலியும், அரசு வழக்கறிஞர் நூர் ரைஹான் முகமது யூசுப்பும் ஆஜராகினர்.

Scroll to Top