Tazhal Media – தழல் மீடியா

/ Nov 25, 2026
Latest News
tms

குடும்பத்தின் முதல் முனைவர் பட்டதாரி! கல்வி உலகில் முத்திரை பதித்த டாக்டர் பூங்கோதை

தஞ்சோங் மாலிம், நவம்பர் 25:வகுப்பறைக் கல்வியில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாணவர்களின் சிந்தனை மற்றும் அறநெறிப் பண்புகளை மேம்படுத்த முடியுமா என்ற ஆய்வில் புதிய கற்பித்தல் மாதிரியை உருவாக்கி சாதனை படைத்துள்ளார் மலேசியக் கல்வியாளர் டாக்டர் பூங்கோதை சந்திரசேகரம்.சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் (UPSI) கலை, கணினியியல் மற்றும் படைப்பாக்கத் தொழில்துறை புலத்தின் கீழ் கற்பித்தல் ஊடகத் துறையில் அவர் முனைவர் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

அதுமட்டுமின்றி, நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் தனது ஆய்வை நிறைவு செய்து Graduate on Time (GOT) சிறப்பையும் பெற்றுள்ளார்.அவரது ஆய்வின் முக்கிய அம்சம், விரிவாக்கப்பட்ட மெய்நிகர் தொழில்நுட்பமான Augmented Reality (AR) மூலம் இடைநிலைப் பள்ளி மாணவர்களின் அறநெறிச் சிந்தனையை மேம்படுத்துவதாகும். இதற்காக INAR-MOREMO என்ற புதிய கற்பித்தல் மாதிரியை அவர் உருவாக்கியுள்ளார்.

தொழில்நுட்பத்தின் உதவியுடன் மாணவர்கள் அறநெறி சார்ந்த கருத்துகளைப் புரிந்துகொள்வதற்கும், அவற்றைச் சிந்தித்துப் பயன்படுத்துவதற்கும் வழிவகுப்பதே இந்த ஆய்வின் நோக்கமாகும்.இந்தச் சாதனையின் பின்னணியில் நீண்டகாலக் கல்வி மற்றும் பணிப் பயணம் உள்ளது.

மாற்றுத்திறனாளியான தந்தையின் மகளாக எளிய குடும்பத்தில் வளர்ந்த பூங்கோதை, குடும்பத்தில் முதல் முனைவர் பட்டதாரி என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.மலேசியக் கல்வி அமைச்சின் கீழ் 14 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உள்ளது.

அந்தக் காலகட்டத்தில் 2019ஆம் ஆண்டு சிறந்த சேவைக்கான விருதையும், 2022ஆம் ஆண்டு மலேசிய அரசின் உயர்கல்வி உதவித்தொகையையும் பெற்றுள்ளார்.குடும்பப் பொறுப்புகள் மற்றும் பணிச்சுமைகளுக்கு இடையிலும் தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்து முன்னெடுத்து இந்த இலக்கை எட்டியுள்ளார். கல்வித் தொழில்நுட்பம், கற்பித்தல் ஊடகம், நவீன கற்பித்தல் முறைகள், கல்வி ஆராய்ச்சி மற்றும் அறநெறிக் கல்வி ஆகிய துறைகளில் அனுபவம் கொண்டுள்ள அவர், தற்போது பல்கலைக்கழக விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார்.ஆசிரியர் பணியில் பெற்ற அனுபவத்தை ஆராய்ச்சியுடன் இணைத்து, நவீன தொழில்நுட்பத்தின் வழியாகக் கல்வித் துறையில் புதிய மாற்றங்களை உருவாக்க வேண்டும் என்பதே அவரது எதிர்கால நோக்கமாக உள்ளது.

ஒரு கல்வியாளராகத் தனது பயணத்தைத் தொடங்கிய பூங்கோதை, தற்போது ஆராய்ச்சியாளராகவும் விரிவுரையாளராகவும் வளர்ந்திருப்பது அவரது விடாமுயற்சிக்குக் கிடைத்த அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, குடும்பச் சூழல் அல்லது வாழ்க்கைச் சவால்கள் உயர்கல்விக்குத் தடையாக இருக்க வேண்டியதில்லை என்பதை அவரது சாதனை எடுத்துக்காட்டுகிறது.

Scroll to Top