Tazhal Media – தழல் மீடியா

/ Nov 25, 2026
Latest News
tms

போதைப்பொருள் கடத்தல் விசாரணை: நான்கு TUDM அதிகாரிகளின் தடுப்புக்காவல் மேலும் 4 நாட்களுக்கு நீட்டிப்பு!

கோலாலம்பூர், நவம்பர் 25:மலேசிய ராணுவ விமானப்படையின் (TUDM) போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் நான்கு அதிகாரிகளின் தடுப்புக்காவல் மேலும் நான்கு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அவர்களின் தடுப்புக்காவல் நவம்பர் 25ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை தொடரும் என்று புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசைன் ஒமார் கான் தெரிவித்துள்ளார்.கடந்த நவம்பர் 18ஆம் தேதி முதல் ஏழு நாட்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஆரம்பகட்ட தடுப்புக்காவல் காலம் நவம்பர் 24ஆம் தேதியுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இந்த நீட்டிப்பு கோரப்பட்டுள்ளது.இதற்கிடையில், லாபுவானில் கைது செய்யப்பட்ட மற்றொரு TUDM அதிகாரியின் தடுப்புக்காவல் காலம் நவம்பர் 25ஆம் தேதியுடன் முடிவடைவதால், அவருக்கும் தடுப்புக்காவல் நீட்டிப்பு கோரப்படவுள்ளது.

லாபுவானில் கைது செய்யப்பட்ட இரண்டு பொதுமக்கள் மற்றும் சபாவின் தாவாவ் பகுதியில் கைது செய்யப்பட்ட இரண்டு TUDM அதிகாரிகளின் தடுப்புக்காவல் காலம் நவம்பர் 27ஆம் தேதி நிறைவடையவுள்ளது. அவர்களுக்கும் நீட்டிப்பு கோரப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.மேலும், கோலாலம்பூரின் செராஸ் பகுதியில் கைது செய்யப்பட்ட நான்கு பொதுமக்கள் மீண்டும் கைது செய்யப்பட்டு, நவம்பர் 24ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை ஏழு நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் லாபுவானில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின்போது, ராணுவப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தும் கும்பல் கண்டுபிடிக்கப்பட்டது.அந்த நடவடிக்கையில், 96.64 கிலோகிராம் மெத்தாம்பெட்டமைன் எனச் சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதன் மதிப்பு RM4.83 மில்லியன் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், 6.98 கிலோகிராம் திரவ இரசாயனப் பொருளும் கைப்பற்றப்பட்டது.சுபாங் விமானப்படைத் தளத்தில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டடத்தில் ஐந்து பயணப் பெட்டிகள் மற்றும் ஒரு பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்கள், வழக்கமான சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ மொஹமட் காலித் நோர்டின் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.TUDM விமானத்தில் ஏற்றப்படவிருந்த பொருட்களைச் சோதனையிட்டபோது இந்தக் கடத்தல் முயற்சி கண்டறியப்பட்டது. இத்தகைய சோதனை நடைமுறையின் மூலம் முறியடிக்கப்பட்ட முதல் சம்பவம் இதுவெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Scroll to Top